×

சபாநாயகர் அப்பாவு மீது அதிமுக கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது நாளை வாக்கெடுப்பு: துணை சபாநாயகர் அவையை நடத்துவார்

சென்னை: ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது. அப்போது சபாநாயகர் அப்பாவு மீது அதிமுக கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்து வாக்கெடுப்பு நடக்கிறது. தமிழ்நாடு அரசின் 2025-2026ம் ஆண்டுக்கான பட்ஜெட் சட்டப்பேரவையில் கடந்த 14ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழக அரசின் பட்ஜெட்டை தாக்கல் ெசய்தார். அப்போது அதிமுக எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் ஒரு பிரச்னை தொடர்பாக பேச முயன்றார். அப்போது சபாநாயகர் அப்பாவு தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. எனவே திங்கட்கிழமை(17ம் தேதி) எதிர்க்கட்சி துணைத்தலைவர் குறிப்பிட்ட பிரச்னை குறித்து பேச அனுமதி அளிக்கப்படும் என்றார்.

தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும் எழுந்து ஒரு பொருள் குறித்து பேச முயன்றார். அவரையும் சபாநாயகர் அப்பாவு பேச அனுமதி அளிக்கவில்லை. இதைத்தொடர்ந்து அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் பட்ஜெட் உரையை புறக்கணித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் வெளிநடப்பு செய்தனர். அவர்களுடன் பாஜக உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து நேற்று தமிழக அரசின் 2025-2026ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதில் வேளாண் துறைக்கு 45,661 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பட்ெஜட் தாக்கல் முடிந்ததும் நேற்றைய கூட்டம் முடிந்தது.

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சட்டப்பேரவைக்கு விடுமுறை ஆகும். நாளை காலை மீண்டும் தமிழக சட்டப்பேரவை கூடுகிறது. கூட்டம் தொடங்கியதும் மறைந்த முன்னாள் எம்எல்ஏக்கள் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும். தொடர்ந்து பிரபல இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கே.எம்.செரியன் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்படும். அதன் பிறகு நிதிநிலை, வேளாண்மை நிதிநிலை அறிக்கை ஆகியவற்றின் மீதான பொது விவாதம் தொடங்கும். இதில் கட்சி சார்பில் எம்எல்ஏக்கள் பேசுவார்கள். இதற்கிடையில் சபாநாயகர் அப்பாவு மீது எதிர்கட்சியான அதிமுக ஏற்கனெவே சட்டசபை செயலாளர் சீனிவாசனை சந்தித்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொடுத்து இருந்தது.

இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எடுத்துக்கொள்வது தொடர்பாக சபாநாயகர் அப்பாவு கூறியதாவது: அதிக நேரம் பேச அனுமதிக்கவில்லை, பேசுவதை தொலைகாட்சியில் காட்டவில்லை என நம்பிக்கை இல்லா தீர்மானம் அதிமுக சார்பில் கொண்டு வந்துள்ளனர். இதற்கு ஏற்கனவே பதில் அளித்து உள்ளோம். யார் பேசுவதையும் காட்ட கூடாது என குறுகிய எண்ணத்துடன் இந்த அரசு செயல்படவில்லை. கடந்த முறை டெக்னிக்கல் பிரச்னை என சட்டமன்றத்தில் பதில் அளித்து உள்ளேன். இனி அப்படி ஒன்றும் நடைபெறாது. நம்பிக்கை இல்லா தீர்மானம் 17ம் தேதி(நாளை) பேரவையில் எடுத்துக்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

அதன்படி நாளைய தினம் சட்டசபையில் சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெறும் என்று தெரிகிறது. வாக்கெடுப்பு நடக்கும்போது சபாநாயகர் அப்பாவு அவரது இருக்கையில் இருக்கமாட்டார். அந்தநேரத்தில் துணை சபாநாயகர் பிச்சாண்டியோ அல்லது மாற்று தலைவர்களோ சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவையை நடத்துவார்கள்.

The post சபாநாயகர் அப்பாவு மீது அதிமுக கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது நாளை வாக்கெடுப்பு: துணை சபாநாயகர் அவையை நடத்துவார் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu Legislative Assembly ,Government of Tamil Nadu ,
× RELATED பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த...