×

எனது மகன்கள் இரு மொழி கொள்கையில் படித்தவர்கள்: அண்ணாமலைக்கு அமைச்சர் பி.டி.ஆர் பதிலடி

மதுரை: எனது மகன்கள் இருமொழிக் கொள்கையில் படித்தவர்கள் தான் என அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்துள்ளார். மதுரை டி.எம்.கோர்ட் சந்திப்பில், மாநகர் மாவட்ட திமுக சார்பில் தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்கும், ஒன்றிய அரசைக் கண்டித்து பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது: எல்கேஜி, யுகேஜி மட்டத்தில் உள்ளவர்கள் எல்லாம் வந்து முனைவர் பட்டம் படிக்கிறவங்க கிட்ட, இப்படித்தான் கல்வி கற்றுக்கொள்ள வேண்டும் என சொன்னால் யாராவது கேட்பார்களா.

இன்றைக்கு, தமிழ்நாட்டில் பல்லாயிரம் பள்ளிகளில் பல லட்சம் மாணவர்கள் கல்வி கற்றுக் கொண்டிருக்கிறார்கள். இந்த சூழலில் கூடுதல் மொழியை கட்டாயப்படுத்தி கற்றுக் கொடுக்க வேண்டும் என்றால், எத்தனை ஆயிரம் புதிய ஆசிரியர்கள் நமக்கு தேவை. எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாக தேவைப்படும். ஒரு கல்வி திட்டத்தை உருவாக்கும்போது சமூகநீதிக்கு ஏற்ப அனைவருக்குமானதாக இருக்க வேண்டும். அமைச்சர் பிள்ளைகள் எங்க படிக்கிறாங்க? அமைச்சர் பேரன்கள் எங்கு படிக்கிறார்கள், எங்க 34 பேரோட பசங்கள் எங்க படிக்கிறாங்க என்பது முக்கியமில்லை.

8 கோடி மக்களுக்கு என்ன கல்வித்திட்டம் என்பது தான் முக்கியம். இங்கே நான் ஒரு உண்மையை சொல்ல விரும்புகிறேன். ஏதோ ஒரு கட்சித் தலைவர்(அண்ணாமலை) இன்னைக்கு ஒரு பேட்டியில் சொல்லி இருக்கார், அமைச்சர் பி.டி.ஆரின் பசங்கள் எத்தனை மொழியில் படித்தார்கள் என்று சொல்லட்டும் என்கிறார். நான் தெளிவாக விளக்கம் சொல்கிறேன். எனக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இருவரும் எல்கேஜி முதல் பள்ளிக்கல்வி முடிக்கிற வரை இரு மொழிக் கொள்கையில் தான் படித்தார்கள். யாருக்கெல்லாம் விளக்கம் தேவையோ எடுத்துக் கொள்ளட்டும். இவ்வாறு அவர் பேசினார்.

The post எனது மகன்கள் இரு மொழி கொள்கையில் படித்தவர்கள்: அண்ணாமலைக்கு அமைச்சர் பி.டி.ஆர் பதிலடி appeared first on Dinakaran.

Tags : Minister PTR ,Annamalai ,Madurai ,Palanivel Thiagarajan ,Madurai DMC Court ,DMK ,Metropolitan District ,Union government ,Tamil Nadu… ,
× RELATED ‘முருகன்’ தொகுதி அலறும் ‘நாட்டாமை’