- வீதபாடி
- பஜாஜ்
- ஈரோடு இடைக்கால தேர்தல்கள்
- ஜெயலலிதா
- எடப்பாடி பழனிசாமி
- பன்னீர் செல்வம்
- பேராயர்
- பொதுச்செயலர்
- பன்னீர் செல்வம் கட்சி
- உச்ச தொண்டர்கள்
- உரிமை மீட்புக் குழு
- ஈரோடு
- தின மலர்
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியாக பிரிந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புகுழு என்ற அமைப்பை தொடங்கி, அதிமுகவை மீட்கப்போவதாக கூறி வருகிறார். இது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளார். அதே நேரத்தில் சூரியமூர்த்தி என்பவரும், இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமிக்கு ஒதுக்க கூடாது என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்தி 4 வாரத்திற்குள் பதில் அளிக்குமாறு தேர்தல் கமிஷனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், சூரியமூர்த்தி தரப்பினரிடம் தேர்தல் கமிஷன் விசாரணை நடத்தியது. இந்நிலையில் அதிமுக உறுப்பினரான சேலத்தை சேர்ந்த வக்கீல் மணிகண்டன், டெல்லியில் நேற்றுமுன்தினம் தேர்தல் கமிஷனில் மனு ஒன்றை கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘அதிமுகவில் உறுப்பினராக இல்லாதவர்கள் தேர்தல் கமிஷனில் மனு கொடுத்துள்ளனர். இதனால் சின்னம் முடக்கப்படுமோ என்ற அச்சம் தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. ஈரோடு இடைத்தேர்தலில் இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்க இருக்கிறது. இதில் உடனடியாக விசாரணை நடத்தி கட்சியும், சின்னமும் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கே சொந்தம் என தேர்தல் கமிஷன் அறிவிக்க வேண்டும் என மனு கொடுத்துள்ளேன்’ என கூறினார்.
இதன்மூலம் ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடும் என்பது தெரியவந்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி சந்தித்த அனைத்து தேர்தலிலும் தோல்வியடைந்த நிலையில், சமீபத்தில் நடந்த விக்ரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்தது. அதே முடிவை ஈரோடு இடைத்தேர்தலிலும் எடுக்க எடப்பாடி பழனிசாமி முடிவு செய்திருந்தார். மீண்டும் ஒரு தோல்வியை தவிர்க்கும் வகையில் இந்த முடிவை அவர் எடுத்தார்.
ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையில் இடைத்தேர்தலை புறக்கணிக்க வேண்டாம் என பெரும்பாலான நிர்வாகிகள் கூறினர்.
இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்தல் வர இருக்கிறது. அதற்கு முன்னோட்டமாக இந்த இடைத்தேர்தலை சந்தித்து விடலாம், மக்களின் மனநிலையையும் தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்தனர். இதற்கு எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது. நாளை (11ம்தேதி) மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இடைத்தேர்தலில் போட்டியிடலாம் என்ற அறிவிப்பை அவர் வெளியிட இருப்பதாக அதிமுகவினர் தெரிவித்தனர். அதே நேரத்தில் பாஜ கூட்டணியில் இருந்து எடப்பாடி பழனிசாமி வெளியே வந்துவிட்டார்.
தற்போதுள்ள சூழ்நிலையில் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் பரவியது. அவ்வாறு முடக்கப்பட்டால் அதிமுக பெரும் பின்னடைவை சந்திக்கும். பாஜ மேலிடத்தின் செல்வாக்கால், தற்காலிகமாக சின்னம் முடங்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. சரியான நேரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு பாடம் கற்பிக்க நல்ல வாய்ப்பு என பாஜவினர் நம்பி இருந்தனர். அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்கள் உள்ளனர். இதற்கு தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலைதான் இடையூறாக இருக்கிறார்.
அவரை தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்பது தான் அதிமுகவின் ஒரே கோரிக்கையாக இருந்தது. அப்படி அவரை தூக்கினால் பாஜவுடன் இணைந்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க தயாராக இருப்பதாக பாஜவுடன் நெருக்கமாக இருக்கும் அதிமுக தலைவர்கள் தெரிவித்தனர். முன்னதாக ஈரோடு இடைத்தேர்தலில் சின்னத்திற்கு எந்த சிக்கலும் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதில் உடன்பாடும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் இலை சின்னம் ஏற்கனவே ஒதுக்கப்பட்ட எடப்பாடியிடமே நீடிக்கும் என்ற உத்தரவு வரும் என அதிமுகவினர் எதிர்பார்த்துள்ளனர். சென்னை சிவில் நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கின் தீர்ப்பு முடிவு எப்படி வருகிறதோ, அதற்கு இந்த உத்தரவு கட்டுப்பட்டது என தேர்தல் கமிஷன் அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக அதிமுகவினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து அதிமுகவினர் கூறுகையில், ‘‘சட்டமன்ற தேர்தலில் பாஜவுடன் அதிமுக கூட்டணி அமைய வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. அதிமுகவினர் முதுகில் ஏறி தமிழ்நாட்டில் பாஜ கால்பதித்தே ஆக வேண்டும் என்பது தான் அவர்களின் ஒரே நோக்கமாக இருக்கிறது. எங்களுக்கும் தற்போதுள்ள நெருக்கடியில் வேறுவழியில்லை. இரட்டைஇலை சின்னமும் கைவிட்டு போய்விடக் கூடாது. எனவே டீலுக்கு ஒத்துக்கொண்டுவிட்டோம். இலை சின்னம் விரைவில் எங்களுக்கு வருகிறது. ஈரோடு இடைத்தேர்தலில் பாஜ போட்டியிடாது. சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி சேருகிறது. பொங்கலுக்கு அடுத்து பாஜ தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்படுவார் என உறுதி கொடுத்துள்ளனர். அதிமுகவுடன் நட்புடன் இருக்கும் ஒருவர் பாஜவின் தலைவராவார்,’’ என்றனர்.
The post ஈரோடு இடைத்தேர்தலில் போட்டி இரட்டை இலைக்காக பாஜவுடன் கூட்டணி வைக்க எடப்பாடி முடிவு? ரகசிய உடன்பாடு குறித்து பரபரப்பு தகவல் appeared first on Dinakaran.