குன்றத்தூர்: குன்றத்தூர் அருகே சாலையில் சென்றுக்கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தால் பரபரப்பு நிலவியது. இதில் மருத்துவர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்தவர் உமேஷ்குமார் (37). மாங்காடு அடுத்த சிக்கராயபுரத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவர், நேற்று காலை வழக்கம்போல் பணிக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து காரில் சிக்கராயபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலை குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கம் அருகே சென்றபோது, திடீரென காரின் முன் பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனால், காரை சாலையோரமாக நிறுத்திவிட்டு இறங்கியுள்ளார்.
சிறிது நேரத்தில் கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது. அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், தாம்பரத்தில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. தீப்பிடித்து எரிந்ததால் காரில் இருந்த கண்ணாடிகள், பேட்டரிகள் திடீரென வெடித்து சிதறியது.சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீ பிடித்து எரிந்த நிலையில், அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதுகுறித்து குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
The post நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்: மருத்துவர் உயிர் தப்பினார் appeared first on Dinakaran.