மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே வேடவாக்கம் கிராமத்தில் விவசாயி வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற இரு கொள்ளையர்கள் பொதுமக்களிடம் சிக்கியபோது ஏரியில் குதித்த தப்ப முயன்றனர். அப்போது, ஏரியில் ட்ரோன் கேமராவை பறக்க விட்டு கொள்ளையர்களை பிடித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியம் வேடவாக்கம் கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட விவசாய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதே கிராமத்தைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி (62). விவசாயி. இவர் நேற்று முன்தினம் தனது உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சென்றிருந்தார். இவரது மகன் சூர்யா (35) என்பவர் வீட்டை பூட்டிவிட்டு தனது விவசாய நிலத்தில் டிராக்டர் மூலம் விவசாய பணிகளை மேற்கொண்டிருந்தார். பணி முடிந்து அவர் தனது வீட்டிற்கு டிராக்டரை ஓட்டிக்கொண்டு வந்துள்ளார். அப்போது, வீட்டின் எதிரே இரு சக்கர வாகனத்தில் அமர்ந்திருந்த ஒருவன் சூர்யா வருவதை கண்டதும் அங்கிருந்து நைசாக இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றுள்ளான். இவர் டிராக்டரை வீட்டின அருகே நிறுத்திவிட்டு வீட்டுக்குள் செல்ல முயன்றபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது, கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இருவர், இவர் வருவதை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்துள்ளனர். உடனடியாக இவர் திருடன்… திருடன்… என கூச்சலிட்டு அருகில் இருந்தவர்களை அழைத்துள்ளார். அப்போது, கிராம மக்கள் சிலர் ஒன்றிணைந்து சென்று பார்த்தபோது அந்த வீட்டின் பின்பக்க சுவர் ஏரி குதித்த இருவர் அருகில் இருந்த ஏரியில் குதித்து நீரில் நடந்தும் நீந்தியும் சென்றவாறு தப்பிச் செல்ல முயற்சித்தனர்.
இதை பார்த்த இளைஞர்கள் அவர்களை பிடிக்க முயற்சி செய்து அவர்கள் தப்பிச்சென்ற ஏரியில் இறங்கி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மேலும், கிராமத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஏரியின் பல பகுதிகளில் சுற்றி நின்று கொள்ளையர்கள் தப்பிச்செல்ல முடியாதவாறு கண்காணித்தனர். ஆனால், ஏரியில் இறங்கி தப்பி சென்ற கொள்ளையர்களை இவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனையடுத்து, அப்பகுதியில் ஸ்டுடியோ கடை நடத்தி வரும் ஒருவரை தொடர்பு கொண்டு நடந்தவற்றைக் கூறி ட்ரோன் கேமரா எடுத்து வர செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து ஏரியில் அவர்கள் சென்ற பகுதியில் ட்ரோன் கேமராவை பறக்கவிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள் ஏரியில் வெகுதூரம் சென்று அங்கு முளைத்திருந்த செடி-கொடிகளுக்கு மத்தியில் தண்ணீரில் நீந்தியவாறு மறைந்திருந்த காட்சி ட்ரோன் கேமராவில் பதிவாகி இருந்தது. இதையடுத்து இளைஞர்கள் ட்ரோன் கேமரா காட்சிகளின் அடிப்படையில் ஏரியில் இறங்கி சென்று இரு கொள்ளையர்களையும் சுற்றிவளைத்து கரைக்கு இழுத்து வந்தனர். இதுகுறித்து தகவல் மதுராந்தகம் போலீசாருக்கும் தெரிவிக்கப்பட்டது. போலீசாரின் விசாரணையில் சென்னை மடிப்பாக்கம் சோழன் தெருவை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் ஜெகன் என்கிற சஞ்சய் (23) என்பதும், சென்னை ஜமீன் பல்லாவரம் பச்சையப்பன் கோயில் தெருவை சேர்ந்த இயேசுராஜ் மகன் ஜான்சன் (20) என்பதும் தெரியவந்தது.
இவர்கள் மீது பல்லாவரம், மடிப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் பல்வேறு திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகள் பதிவாகி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் மதுராந்தகம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த இரு கொள்ளையர்களையும் அழைத்துச் செல்ல இரு சக்கர வாகனத்தில் வீட்டின் எதிரே தயாராக நின்று இருந்து வீட்டின் உரிமையாளர் வருவதை கண்டு தப்பி ஓடிய ஒரு நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். வேடவாக்கம் கிராமத்தில் இவர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வீட்டிலிருந்து நகை-பணம் ஏதும் திருடு போகவில்லை. அவர்கள் கொள்ளையடிப்பதற்கு முன்பாகவே பொதுமக்களிடம் சிக்கிக்கொண்டனர் என போலீசார் தெரிவித்தனர்.
The post வேடவாக்கம் விவசாயி வீட்டில் கொள்ளை முயற்சி; ஏரியில் குதித்து தப்ப முயன்ற இருவர் டிரோன் கேமரா மூலம் சிக்கினர் appeared first on Dinakaran.