×

லாஸ் ஏஞ்சல்சில் பரவி வரும் காட்டுத்தீயில் சிக்கி 7 பேர் பலி: பைடனின் தவறான நிர்வாகம்தான் காரணம் என டிரம்ப் காட்டம்

வாஷிங்டன்: லாஸ் ஏஞ்சல்சில் பரவி வரும் காட்டுத்தீயில் சிக்கி 7 பேர் பலியாகியுள்ளனர். பைடனின் தவறான நிர்வாகத்தால்தான் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் கடுமையான காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இது, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் மலைப்பகுதிகளுக்கு வேகமாக பரவி வருகிறது. கடற்கரை பகுதிகளில் காற்று வேகமாக வீசுவதால் காட்டுத்தீ நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவி வருகிறது. இதனால் கடும் புகைமூட்டம் நிலவி வருகிறது. காட்டுத் தீயில் சிக்கி ஏராளமான வீடுகள், வாகனங்கள் நாசமாகின. சுமார் 10 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பு முற்றிலும் நாசம் ஆகியுள்ளன.

தகவலறிந்து தீயணைப்பு படை வீரர்கள், மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காட்டுத் தீயை அணைக்க போராடி வருகிறார்கள். அப்பகுதி வீடுகளில் வசித்து வந்த 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தீயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 30 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர் என தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் 46 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மின்சாரம் இல்லாமல் தவித்து வருகிறார்கள். இந்நிலையில், கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி 7 பேர் உடல் கருகி பலியாகினர் என்றும், மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர் என உள்ளூர் செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த காட்டுத்தீயால் சேதங்கள் அதிகரிக்கும் என்றும் பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரித்தனர்.

இதுகுறித்து சமூகவலைதளத்தில், டொனால்டு டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில், ‘தெற்கு கலிபோர்னியாவில் காட்டுத்தீ பரவி வருகிறது. தீயை கட்டுப்படுத்த போதுமான தண்ணீர் இல்லை. அரசிடம் பணம் இல்லை. இதைத்தான் ஜோ பைடன் என்னிடம் விட்டு செல்கிறார். இதற்கு அவருக்கு நன்றி. அதிபர் ஜோ பைடனின் தவறான நிர்வாகத்திற்கான உதாரணம். தெற்கு கலிபோர்னியாவிற்கு தண்ணீரை திருப்பி விடுவதற்கான திட்டத்தை கவர்னர் நியூசோம் நிராகரித்துள்ளார். உருகும் பனியிலிருந்து தண்ணீரை கலிபோர்னியாவின் பல பகுதிகளுக்கு தினமும் திருப்பி விட வேண்டும். இந்த பேரழிவை சமாளிக்க காப்பீட்டு நிறுவனங்களிடம் போதுமான பணம் இருக்குமா? வரும் 20ம் தேதி போதுமான அளவு வேகமாக வரட்டும்’ என்று கூறியுள்ளார்.

The post லாஸ் ஏஞ்சல்சில் பரவி வரும் காட்டுத்தீயில் சிக்கி 7 பேர் பலி: பைடனின் தவறான நிர்வாகம்தான் காரணம் என டிரம்ப் காட்டம் appeared first on Dinakaran.

Tags : Los Angeles ,Trump ,Biden ,Washington ,Southern California, USA ,Dinakaran ,
× RELATED கலிஃபோர்னியாவில் தீவிரமாக பரவி வரும்...