- டிரம்ப்
- வாஷிங்டன்
- ஹமாஸ்
- காசா
- மத்திய கிழக்கு
- டொனால்டு டிரம்ப்
- அமெரிக்காவின் ஜனாதிபதி
- டொனால்ட்…
- தின மலர்
வாஷிங்டன்: ‘நான் பதவியேற்கும் முன்பாக, காசாவில் உள்ள பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்க வேண்டும். இல்லாவிட்டால் மத்திய கிழக்கில் பயங்கரமான சம்பவம் நடக்கும்’ என அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்க உள்ள டொனால்டு டிரம்ப் மிரட்டி உள்ளார். அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்டு டிரம்ப் வரும் 20ம் தேதி பதவி ஏற்க உள்ளார். அதிபர் தேர்தலில் அவரது வெற்றியை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்றுக் கொண்ட நிலையில், புளோரிடாவில் உள்ள மார்-ஏ-லாகோவில் நேற்று செய்தியாளர்களை டிரம்ப் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
காசாவில் ஹமாஸ் படையினர் பிடித்து வைத்துள்ள பணயக் கைதிகளை, நான் பதவி ஏற்கும் முன்பாக விடுவிக்க வேண்டும். இவ்வளவு நாட்களும் பொறுமை காத்ததே அதிகம். இது ஹமாசுக்கு நல்லதல்ல. உண்மையில் சொல்லப் போனால், யாருக்கும் நல்லதாக இருக்காது. இனி எதையும் நான் சொல்வதற்கில்லை. அவர்கள் எப்போதோ பணயக் கைதிகளை விடுவித்திருக்க வேண்டும். ஒருபோதும் அக்டோபர் 7ம் தேதி தாக்குதலை ஹமாஸ் நடத்தியிருக்கக் கூடாது. ஆனால் நடந்து விட்டது, பலர் கொல்லப்பட்டு விட்டார்கள்.
எனவே, காசாவில் ஹமாஸ் பிடியில் இருப்பவர்கள், இனியும் நீண்டகாலம் பணயக் கைதிகளாக இருக்க முடியாது. இஸ்ரேலில் இருந்தும், அமெரிக்காவில் இருந்தும் பலரும் பணயக் கைதிகளை மீட்க வேண்டுமென கெஞ்சுகிறார்கள். தாய்மார்கள், தந்தைமார்கள் கதறுகிறார்கள். 20 வயது இளம்பெண்ணை முடியை பிடித்து இழுத்து, சாக்குமூட்டை போல காரில் ஏற்றிச் சென்றார்கள். அவர் கொல்லப்பட்டுள்ளார். இவ்வளவு கொடூரமாக அந்த பெண்ணை நடத்தியிருக்கிறார்கள். நான் எந்த பேச்சுவார்த்தைக்கும் இடையூறு ஏற்படுத்த விரும்பவில்லை. ஆனால் இன்னும் 2 வாரம் இருக்கிறது. அதற்குள் அனைத்து பணயக் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் மத்திய கிழக்கில் பயங்கரமான சம்பவம் நடக்கும்.இவ்வாறு டிரம்ப் மிரட்டி உள்ளார்.
காசாவில் உள்ள ஹமாஸ் போராளிகள் கடந்த 2023, அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலில் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தினர். அதோடு அங்கிருந்த 250க்கும் மேற்பட்டோரை பணயக் கைதிகளாக கொண்டு சென்றனர். இதில் 150 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் இன்னும் ஹமாசிடம் சிக்கி உள்ளனர். அவர்களில் பலர் இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இதில் இஸ்ரேலியர்கள் மட்டுமின்றி அமெரிக்காவை சேர்ந்தவர்களும் சிக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. பணயக் கைதிகளை மீட்பதில் இதுவரை அமெரிக்க அதிபர் பைடன் மென்மையான போக்கை கையாண்ட நிலையில், டிரம்ப் ஆரம்பத்திலேயே அதிரடியை காட்டி உள்ளார். ஆனால், பணயக் கைதிகளை ஹமாஸ் விடுவிக்காவிட்டால் எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை டிரம்ப் விளக்கமாக கூறவில்லை.
The post காசாவில் உள்ள பணயக்கைதிகளை விடுவிக்க ஹமாசுக்கு கெடு விதித்த டிரம்ப்: இன்னும் 12 நாளில் செய்யாவிட்டால் பயங்கர சம்பவம் நடக்குமென மிரட்டல் appeared first on Dinakaran.