×

ஜஸ்டின் ட்ரூடோ விலகல் எதிரொலி; கனடா பிரதமர் பதவிக்கு 4 பேர் போட்டி? தமிழகத்தை சேர்ந்த அனிதா ஆனந்துக்கும் வாய்ப்பு

நியூயார்க்: ஜஸ்டின் ட்ரூடோ விலகல் எதிரொலியாக கனடா பிரதமர் பதவிக்கு 4 பேர் போட்டியிட்டுள்ள நிலையில், அந்த பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த அனிதா ஆனந்தும் உள்ளார். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு உள்நாட்டில் எதிர்ப்பு, அமெரிக்கா மற்றும் இந்தியா உடனான உறவுச் சிக்கலானதால் அவரது செல்வாக்கு சரிந்தது. அதையடுத்து மார்ச் மாதம் கூட நாடாளுமன்றத்தில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வரப்போவதாக எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துள்ளன. எதிர்க்கட்சிகளின் இந்த அறிவிப்பு அவருக்கும் லிபரல் கட்சிக்கும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால், லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ட்ரூடோவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இந்தப் பின்னணியில், பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாகவும், புதிய பிரதமர் பொறுப்பேற்கும் வரை பதவியில் தொடரப் போவதாகவும் ட்ரூடோ நேற்று (ஜன.6) அறிவித்தார்.

அதேநேரத்தில், புதிய பிரதமராக யார் பொறுப்பேற்றாலும், அவரின் பதவிக் காலம் விரைவில் முடிவுக்கு வரலாம் என்ற எதிர்கால சவாலை லிபரல் கட்சி எதிர்கொண்டு வருகிறது. அடுத்த பிரதமர் யார்? – பேங்க் ஆஃப் கனடாவின் முன்னாள் தலைவரான மார்க் கார்னி, கனடாவின் அடுத்த பிரதமராக ஆகக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது. எனினும், அவருக்கு அரசியல் அனுபவம் இல்லை என்கின்றனர். அதேபோல், ஜஸ்டின் ட்ரூடோ அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்து கடந்த மாதம் பதவி விலகிய கிறிஸ்டினா ஃப்ரீலாண்ட், புதிய பிரதமருக்கான போட்டியில் முன்னிணியில் உள்ளார். எனினும், ஃப்ரீலாண்ட் ராஜினாமா செய்த பிறகு ட்ரூடோ அவரை கடுமையாக விமர்சித்ததை சிலர் சுட்டிக்காட்டுகின்றனர். அதற்கடுத்த இடத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டவருமான அனிதா ஆனந்த், அந்நாட்டின் அடுத்த பிரதமராக பதவியேற்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கனடா போக்குவரத்துத் துறை அமைச்சரும், லிபரல் கட்சியின் மூத்த தலைவருமான அனிதா ஆனந்தின் தந்தை ஆனந்த், தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டவர். அவரது தாய் சரோஜ் ராம் பஞ்சாபை சேர்ந்தவர் ஆவர். மற்றொரு சாத்தியமான வேட்பாளராக புதிய நிதி அமைச்சர் டொமினிக் லெப்லாங்க் கருதப்படுகிறார். முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும், ட்ரூடோவின் நெருங்கிய நண்பருமான டொமினிக் லெப்லாங்க், சமீபத்தில் டிரம்ப் உடனான இரவு விருந்தில் ஜஸ்டின் ட்ரூடோவுடன் இணைந்து பங்கேற்றார். எனினும், ஜனவரி 20ம் தேதி அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்பதற்கு முன், கனடாவின் புதிய பிரதமர் பதவியேற்பு நிகழாது என கூறப்படுகிறது. ஒட்டுமொத்தமாக பார்த்தால் கனடா பிரதமர் பதவிக்கு 4 பேரின் பெயர்கள் அடிபடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post ஜஸ்டின் ட்ரூடோ விலகல் எதிரொலி; கனடா பிரதமர் பதவிக்கு 4 பேர் போட்டி? தமிழகத்தை சேர்ந்த அனிதா ஆனந்துக்கும் வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Justin Trudeau ,prime minister of ,Canada ,Anita Anand ,Tamil Nadu ,New York ,United ,States ,India ,
× RELATED கட்சி தலைவர் பதவியிலிருந்து கனடா...