தேனி, ஜன. 8: பள்ளி மாணவ, மாணவியர்களுக்கிடையே நடந்த மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டியில் தேனி மாவட்டத்தை சேர்ந்த 48 பேர் வெற்றி பெற்றனர். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் துறை சார்பில், கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பரில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் தனியார் பள்ளிகளில் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தனிநபர் போட்டிகள், குழு போட்டிகள் நடத்தப்பட்டன. இதன்படி, நாட்டுப்புற நடனம், நகைச்சுவைத் திறன், வீதி நாடகம், மணல் சிற்பம், களிமண் சிற்பம், பறை, கிராமிய நடனம், கதை கூறுதல், மாறுவேடப் போட்டி உள்ளிட்ட்ட 18 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் பள்ளி அளவில், வட்டார அளவில், மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவியர் கலந்து கொள்ளும் மாநில அளவிலான போட்டிகள் கடந்த ஜனவரி 3, 4 ஆகிய தேதிகளில் ஈரோடு, நாமக்கல், கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் நடந்தது.
தேனி மாவட்டத்தில் இருந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் 64 பள்ளிகளைச் சேர்ந்த 240 மாணவ, மாணவியர் இப்போட்டிகளில் கலந்து கொண்டனர். இதில் மாநில அளவில் நடந்த போட்டிகளில் 7 போட்டிகளில் முதலிடத்தையும், 7 போட்டிகளில் 2ம் இடத்தையும், 4 போட்டிகளில் 3ம் இடத்தையும் 48 பேர் வெற்றிபெற்றதாக நேற்று மாலை அறிவிக்கப்பட்டது. இதில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு கலையரசன் பட்டம் சென்னையில் நடக்கும் விழாவில் வழங்கப்பட உள்ளது
The post நில அளவிலான கலைத்திருவிழா போட்டியில் தேனி மாவட்ட பள்ளி மாணவர்கள் 48 பேர் வெற்றி appeared first on Dinakaran.