சென்னை, ஜன. 5: ஆந்திர மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு 327 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் 3 பேருக்கு தலா 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆந்திர மாநிலம் அன்னாவரத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு கஞ்சா கடத்தப்படுவதாக கடந்த 2021 ஜூலை 17ம் தேதி தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் ஊத்துக்கோட்டை அருகே ஆரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வந்த பாலம் அருகே சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த லாரியை சோதனை செய்ததில் லாரியில் தனித்தனி பண்டல்களாக மொத்தம் 327 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள் லாரியை ஓட்டிவந்த டிரைவர் சங்கரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது சங்கர், சென்னை கொடுங்கையூரை சேர்ந்த மைக்கேல் என்பவர் இந்த கஞ்சாவை ஆந்திராவிலிருந்து வாங்கியதாகவும் தமிழ்நாடு கேரளா எல்லையான களியக்காவிளையை சேர்ந்த ஸ்ரீநாத் என்பவரிடம் கஞ்சாவை ஒப்படைக்க லாரியில் கொண்டு சென்றதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, சங்கரை கைது செய்த போலீசார் பின்னர் மைக்கேல் மற்றும் ஸ்ரீநாத்தையும் கைது செய்தனர். அவர்கள் மீது போதை பொருள் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை போதை பொருள் தடுப்பு பிரிவுகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதால் சங்கர், ஸ்ரீநாத், மைக்கேல் ஆகியோருக்கு தலா 12 ஆண்டுகள் சிறை தண்டனையும் தலா ரூ.3 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
The post தமிழகத்திற்கு 300 கிலோ கஞ்சா கடத்திய மூவருக்கு 12 ஆண்டு சிறை appeared first on Dinakaran.