- - நிலை
- ஈரோடு
- தமிழ்
- தமிழ்நாடு
- வீட்டு வசதி மேம்பாட்டு அமைச்சர்
- முத்துசாமி
- ஈரோடு மாவட்டம்
- பள்ளி கல்வித் துறை
ஈரோடு, ஜன.4: ஈரோடு மாவட்டத்தில் மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டியை தமிழ்நாடு வீட்டு வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார். இதில், 38 மாவட்டங்களில் இருந்து 4,811 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.
மாணவர்களின் கலைத்திறனை மேம்படுத்தும் வகையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் கலைத்திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கலைத்திருவிழா கடந்த நவம்பர் மாதம் 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெற்றது.
இந்த, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாநில அளவிலான கலைத்திருவிழா நேற்று தொடங்கியது. இதில், நாட்டுப்புற பாடல், வில்லுப்பாட்டு, செவ்வியல் இசை, பம்பை உருமி, பறை, மிருதங்கம், மணல் சிற்பம், இலக்கிய நாடகம், பரதநாட்டியம், தெருக்கூத்து, வீதி நாடகம் உள்ளிட்ட 30 வகையான போட்டிகள் நடக்கிறது.
போட்டியில், 38 மாவட்டங்களில் இருந்து, 9ம் வகுப்பு, 10ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் 4,811 பேர் பங்கேற்றனர். கொங்கு கல்லூரியில் நடந்த தொடக்க விழாவுக்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கினார். பிரகாஷ் எம்.பி, மாநகராட்சி மேயர் நாகரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சுப்பாராவ் வரவேற்று பேசினார். வீட்டு வசதித்துறை அமைச்சர் சுமுத்துசாமி கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.
2 நாட்கள் நடக்கும் போட்டியில், முதலாம் நாளான நேற்று, 2,660 மாணவ, மாணவிகள் பங்கேற்று, தங்களது திறனை வெளிப்படுத்தினர். 2வது மற்றும் இறுதி நாளான இன்று 2,151 மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களது திறனை வெளிப்படுத்த உள்ளனர். போட்டிகள் கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இந்துஸ்தான் அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி, கங்கா மெட்ரிக் பள்ளி, கங்கா மேல்நிலை பள்ளி ஆகிய இடங்களில் நடக்கிறது. மாநில அளவிலான போட்டியில், முதல் 25 இடங்களில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, தமிழ்நாடு முதலமைச்சரால் கலையரசன், கலையரசி பட்டம் வழங்கப்பட்டு, வெளிநாடுகளுக்கு கல்விச்சுற்றுலா அழைத்து செல்லப்படுகின்றனர்.
போட்டி தொடக்க நிகழ்ச்சியில், துணை மேயர் செல்வராஜ், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் நவமணி கந்தசாமி, முதன்மை கல்வி அலுவலர் சுப்பாராவ், மாவட்ட கல்வி அலுவலர் திருநாவுக்கரசு, உதவி திட்ட அலுவலர் ரவிச்சந்திரன், கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாளாளர் தங்கவேல், முதல்வர் வாசுதேவன் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
The post மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டி appeared first on Dinakaran.