சென்னை: விமானத்தில் எடுத்து செல்ல தடை செய்யப்பட்டுள்ள ஜிபிஎஸ் கருவியுடன் சென்னையில் இருந்து பெங்களூரு செல்ல முயன்ற பிரான்ஸ் நாட்டு சுற்றுலா பயணியை சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையில் கண்டு பிடித்து, ஜிபிஎஸ் கருவியை பறிமுதல் செய்தனர். சென்னையில் இருந்து பெங்களூருக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று இரவு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாராகிக் கொண்டு இருந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளின் உடைமைகளை பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்து விமானத்திற்கு அனுப்பிக் கொண்டு இருந்தனர்.
அப்போது பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெர்னார்ட் (62) என்பவரின், கைப்பையை பரிசோதித்த போது, அதனுள் விமானத்தில் எடுத்துச் செல்வதற்கு தடை செய்யப்பட்டுள்ள ஜிபிஎஸ் கருவி இருந்ததை கண்டுபிடித்தனர். உடனே பாதுகாப்பு அதிகாரிகள் அவரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது பிரான்ஸ் பயணி, ‘நான் சுற்றுலா பயணியாக நேபாளம், டெல்லி வழியாக கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு, சென்னைக்கு வந்தேன். எங்கள் நாட்டில் இந்த கருவியை விமானத்தில் எடுத்துச் செல்வதற்கு தடை விதிக்கப்படுவது இல்லை.
அதேபோல் நேபாளம், டெல்லி விமான நிலையங்களிலும் சோதனையின் போது இந்த கருவியை அவர்கள் கண்டுகொள்ளவில்லை’ என்றார். ஆனால் பாதுகாப்பு அதிகாரிகள் அவருடைய விளக்கத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. விமான பாதுகாப்பு சட்ட விதிகளின்படி, இந்த ஜிபிஎஸ் கருவியை பயணி விமானத்தில் எடுத்துச் செல்லக்கூடாது என்றனர். அதோடு பிரான்ஸ் பயணியிடம் இருந்து, ஜிபிஎஸ் கருவியை பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அவரின் விமான பயணத்தையும் ரத்து செய்து, சென்னை விமான நிலைய போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
The post சென்னையிலிருந்து பெங்களூருக்கு ஜிபிஎஸ் கருவியுடன் செல்ல முயன்ற பிரான்ஸ் சுற்றுலா பயணி சிக்கினார் appeared first on Dinakaran.