புதுச்சேரி: புதுச்சேரியில் பொங்கல் பண்டிகையை ஒட்டி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பொருட்கள் தொகுப்புக்கு பதிலாக தலா ரூ.750 ரொக்கம் கொடுக்க புதுச்சேரி அரசு முடிவு எடுத்துள்ளது. புதுவை அரசு சார்பில் ஆண்டுதோறும் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்பு பொருட்கள் வழங்கப்படும். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அப்போதைய ஆளுநர் கிரண்பேடிக்கும், அப்போதைய காங்கிரஸ் அரசுக்கும் மோதல் ஏற்பட்டு ரேஷன்கடைகள் மூடப்பட்டது. அதையடுத்து பயனாளிகள் வங்கி கணக்கில் ரேஷன் பொருட்களுக்கு பணம் செலுத்தப்பட்டு வந்தது. 2021-ல் என்ஆர்.காங்கிரஸ்- பாஜக அரசு பொறுப்பேற்றவுடன் 2022-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, பச்சைப்பருப்பு, கடலைப்பருப்பு உட்பட 10 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது.
கடந்த 2023-ம் ஆண்டு பொங்கல் பொருட்களுக்கு பதிலாக பயனாளிகள் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டது. அதேபோல கடந்த ஆண்டும் பொங்கல் சிறப்பு பொருட்கள் தொகுப்புக்கு பதிலாக அரசு பணம் ரூ. 500-ஐ வழங்கியது. அதன்பிறகு கூடுதலாக ரூ.250 தரப்பட்டது. மொத்தமாக ரூ.750 கடந்த ஆண்டு தரப்பட்டது. கடந்த தீபாவளிக்கு ரேஷன்கடைகளை புதுவை அரசு திறந்தது. ரேஷன்கடைகள் மூலம் இலவச அரிசி, சர்க்கரை தீபாவளிக்கு தரப்பட்டது. அதைத்தொடர்ந்து மாதந்தோறும் இலவச அரிசியும் 15 நாட்களுக்குள் தரப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இந்நிலையில் பொங்கல் பண்டிகை வரவுள்ளது. எனவே பொங்கல் தொகுப்பு பொருட்களும் கிடைக்கும் என புதுவை மக்கள் எதிர்பார்த்தனர்.
தமிழகத்தில் பச்சரிசி, கரும்பு, சர்க்கரை உள்ளிட்ட பொங்கல் தொகுப்பு பொருட்கள் தர நடவடிக்கை எடுக்கப்பட்டு, இதற்காக டோக்கன் வழங்கும் பணியும் நடந்து வருகிறது. ஆனால், புதுச்சேரியில் பொங்கல் தொகுப்புக்கான ஆரம்பக்கட்ட பணிகள் ஏதும் நடக்கவில்லை. பொங்கல் பொருட்கள் வழங்க அரசு திட்டமிட்டாலும், அதற்கு அனுமதி பெற்று டெண்டர் கோரி பொருட்களை பெற்று விநியோகிக்க போதிய கால அவகாசம் இல்லை. தற்போது எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என குடிமைப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் திருமுருகனிடம் கேட்டதற்கு, “இந்த ஆண்டும் பொங்கல் தொகுப்புக்கு பதிலாக பணம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி ரேஷன்கார்டுக்கு தலா ரூ.750 வீதம் பயனாளிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது. இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.
The post ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பொருட்கள் தொகுப்புக்கு பதிலாக தலா ரூ.750 ரொக்கம்: புதுச்சேரி அரசு முடிவு appeared first on Dinakaran.