மதுரை: மதுரையில் தடையை மீறி பேரணி செல்ல முயன்ற குஷ்பு உள்ளிட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து பாஜக பேரணி நடத்தியது. தீச்சட்டி ஏந்தி பாஜக மகளிரணி பேரணி செல்ல முயன்ற நிலையில் காவல் துறை கைது செய்தது. மதுரை முதல் சென்னை வரை பேரணியாகச் செல்ல முயன்ற நிலையில் கைது செய்யப்பட்டனர். சிலம்பத்துடன் குஷ்பு உள்ளிட்டோர் பேரணியில் ஈடுபட்ட நிலையில் சிறிது நேரத்திலேயே கைதாகினர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டு தமிழக பாஜக மகளிர் அணியினர் குஷ்பு தலைமையில் மதுரையில் இருந்து சென்னையை நோக்கி பேரணியை தொடங்கினர். தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட குஷ்பு உட்பட பாஜக மகளிர் அணியினரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவி கடந்த 23 ஆம் தேதி இரவு வளாகத்திற்குள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். கோட்டூர்புரத்தில் பிரியாணி கடை நடத்தி வரும் ஞானாசேகரன் என்பவர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஞானசேகரன், அண்ணா பல்கலைக்கழகத்தில் மற்றொரு மாணவியையும் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும் அவரது செல்போனில் இருந்து ஏராளமான ஆபாச வீடியோக்கள் இருந்ததும் தெரியவந்துள்ளது. ஞானசேகரன் பல்வேறு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட வீடியோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதிகேட்டு பல்வேறு அரசியல் கட்சியினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இந்த போராட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி மறுத்து வருகிறது. இந்நிலையில் தமிழக பாஜக மகளிர் அணியினர் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதி கேட்டு இன்று மதுரையில் இருந்து சென்னை நோக்கி பேரணியை தொடங்கினர்.
கண்ணகி வேடமிட்டும், கைகளில் சிலம்புடனும் ஏராளமான பெண்கள் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். இதேபோல் அம்மனுக்கு மிளகாய் அரைத்து பூசியும் தீச்சட்டி ஏந்தியும் பாஜக மகளிர் அணியினர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். மதுரை சிம்மக்கல் செல்லத்தம்மன் கோயிலில் தீச்சட்டி ஏந்தி நீதி கேட்டு பாஜக மகளிர் அணியினிர் போராடி வருகின்றனர்.
பாஜக மகளிர் அணி போராட்டத்தை முன்னிட்டு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தடையை மீறி பாஜக மகளிர் அணியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பேரணியை தொடங்கி வைத்தார் குஷ்பு. இதையடுத்து தடையை மீறி பேரணியில் ஈடுபட முயன்ற குஷ்பு உட்பட பாஜக மகளிர் அணி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
The post மதுரையில் தடையை மீறி பேரணி செல்ல முயன்ற குஷ்பு உள்ளிட்ட பாஜகவினர் கைது appeared first on Dinakaran.