உத்தமபாளையம், ஜன. 3: உத்தமபாளையம் அருகே குடும்ப பிரச்னையில் கிணற்றில் குதித்த பெண்ணின் உயிரை காப்பாற்ற முயன்ற வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே உள்ள க.புதுப்பட்டி நாயக்கர் தெருவை சேர்ந்தவர் சின்னமொக்கை இவரது மனைவி முருகேஸ்வரி (28). சில வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்ட, இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி பிரச்னை ஏற்படுவது வழக்கம். நேற்று காலை வழக்கம்போல் கணவன்- மனைவி இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த முருகேஸ்வரி தனது தாயார் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர், திடீரென புதுப்பட்டி இரட்டை புளியமரச் சாலையில் உள்ள கிணற்றில் குதித்துள்ளார்.
அவரைப் பின் தொடர்ந்து வந்த முருகேஸ்வரி வீட்டின் அருகே வசிக்கும் பரத் (24) என்ற வாலிபர் முருகேஸ்வரியை காப்பாற்றுவதற்காக கிணற்றில் குதித்துள்ளார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் இருவரையும் காப்பாற்றுவதற்காக கிணற்றுக்குள் குதித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கம்பம் தீயணைப்பு துறையினர் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்த முருகேஸ்வரியை மீட்டனர். ஆனால், அந்த பெண்ணை காப்பாற்ற சென்ற பரத் தண்ணீருக்குள் மூழ்கினார். இதனையடுத்து முருகேஸ்வரியை சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து 2 மணிநேரம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட தீயணைப்புத்துறையினர் பரத்தை சடலமாக மீட்டனர். மீட்கப்பட்ட பரத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, உத்தமபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
The post குடும்ப பிரச்னையில் கிணற்றில் குதித்த பெண் உயிரைக் காப்பாற்ற முயன்று உயிரிழந்த வாலிபர் appeared first on Dinakaran.