×

திருவெறும்பூரில் விபத்தில் சிக்குவோர் சிகிச்சைக்கு தவிப்பு; அரசு ஆம்புலன்சுகளைஅதிகப்படுத்த வேண்டும்

திருவெறும்பூர், ஜன.3: திருவெறும்பூர் பகுதியில் நடைப்பெறும் சாலை விபத்துக்களில் சிக்குபவர்களை மீட்டு மருத்துவமனைகளில் சேர்ப்பதற்கு போதிய ஆம்புலன்ஸ்கள் இல்லாததால் பல அப்பாவிகளின் உயிர்கள் பறிபோகும் அவல நிலை ஏற்படுகிறது. திருவெறும்பூர் பகுதி தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாகவும் அரசு கல்வி நிறுவனங்கள் நிறைந்த பகுதியாகவும் விளங்குகிறது. இதனால் திருவெறும்பூர் பகுதிக்கு ஐந்து நிமிடத்திற்கு ஒரு மாநகர் பேருந்தும் இரண்டு நிமிடத்திற்கு ஒரு புறநகர் பேருந்தும் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சென்று வருகின்றன.

மேலும் கனரக மற்றும் இலகுரக என நாளுக்கு நாள் வாகனங்களின் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் திருச்சியில் தஞ்சை தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலை இல்லாததால் அடிக்கடி சாலை விபத்துகளும் தொடர் கதையாகி வருகிறது. இதனால் பலர் தங்களது இன்னுயிரை இழந்து வருவதுடன் உடல் உறுப்புகளையும் இழந்து வருகின்றனர்.

இந்த நிலையில் திருவெறும்பூர் பகுதிக்கு சாலை விபத்துகளில் சிக்குவர்களை மீட்பதற்காக 108 ஆம்புலன்ஸ் மூன்று உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் ஒன்று மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. அதேபோல் திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையை பராமரித்து வரும் தனியார் நிறுவனம் சாலை விபத்துகளில் சிக்குவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக ஆம்புலன்ஸ் வைத்திருக்க வேண்டும் ஆனால் இதுநாள் வரை எந்த ஒரு சாலை விபத்தில் சிக்கியோரை அந்த தனியார் நிறுவன ஆம்புலன்ஸ் அழைத்து சென்றதில்லை.

மேலும் சாலை விபத்துகளில் சிக்குவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்காக 108 ஆம்புலன்ஸ் உதவியை பொதுமக்கள் நாடுகின்றனர். அந்த ஆம்புலன்ஸ் வேறு இடத்திற்கு சென்று இருந்தாலும் அல்லது காரணத்தினால் சம்பவ இடத்திற்கு வந்து பாதிக்க பட்டவர்களை மீட்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆக்கி விடுகிறது. இதனால் சாலை விபத்துகளில் சிக்கும் அப்பாவிகள் தங்களது இன்னுயிரை இழந்து வருகின்றனர்.

மேலும் திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சாலை விபத்துகளில் சிக்குபவர்களை முதலில் சிகிச்சைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். ஆனால் அங்கு போதிய வசதிகள் இல்லாததால் முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கின்றனர். இதனால் கால விரையமாகிறது. இதனால் பல அப்பாவிகளின் உயிர்கள் பறிபோகிறது. எனவே திருவெறும்பூர் பகுதியில் போதிய ஆம்புலன்ஸ்களை இயக்க வேண்டும். திருவெறும்பூர் பகுதிக்கு என மூன்று ஆம்புலன்ஸ் உள்ள நிலையில் ஒரு 108 ஆம்புலன்ஸ் மட்டுமே செயல்படுகிறது. மீதமுள்ள ஆம்புலன்ஸ்சுகளும் செயல்பட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் சாலை விபத்தில் சிக்குபவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு தமிழக அரசு பரிசு தொகையை அறிவித்துள்ளது. மேலும் அப்படி அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்படும் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்கு 24 மணி நேரத்திற்கு கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. இப்படி அரசு அறிவிப்புகள் இருந்தும், அது பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வை பெறாததும் ஒரு பெரிய காரணமாக உள்ளது. இதனால் சாலை விபத்துவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்ப்பதற்கு பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் அஞ்சுகின்றனர். இதனை போக்குவதற்கு அரசு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில், திருவெறும்பூர் பகுதியில் சாலை விபத்துகளில் சிக்குபவர்களை மீட்டு அவர்களது உயிரை காப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் துவாக்குடி அரசு மருத்துவமனையில் சாலை விபத்துகளில் சிக்குவர்களை உரிய நவீன சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவமனையின் தரத்தை உயர்த்த வேண்டும் என என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post திருவெறும்பூரில் விபத்தில் சிக்குவோர் சிகிச்சைக்கு தவிப்பு; அரசு ஆம்புலன்சுகளைஅதிகப்படுத்த வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Thiruverumpur ,
× RELATED திருவெறும்பூர் அருகே அனுமதியின்றி...