புதுக்கோட்டை,ஜன.3: ஜல்லிக்கட்டு, வடமாடு, மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்கு ஒரு மாதத்திற்கு முன்பே ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு, வடமாடு, மஞ்சுவிரட்டு போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப் பின்பற்றப்பட வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் தெரிவிக்கப்படுள்ளது.
அதன் விவரம் வருமாறு:
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி வரப்பெறும் விண்ணப்பங்களை, அரசிற்கு அனுப்பி, அரசிதழில் பதிவு செய்து அனுமதி பெற்ற பின்னரே, நிகழ்வு நடத்தப்பட அனுமதிக்க வேண்டும். எனவே சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி நடத்தும் விழாக்குழுவினர் ஒரு மாத காலத்திற்கு முன்னதாகவே கலெக்டருக்கு < https://www.jallikattu.tn.gov.in/ > இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். மாவட்ட என்ற ஒரு அரசிதழில் ஏற்கனவே பதிவுசெய்யப்பட்ட கிராமங்களில் மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கப்படும். ஜல்லிகட்டு, வடமாடு நிகழ்ச்சிகளுக்கு பார்வையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உரிய காப்பீட்டு நிறுவனத்திடம் பெற்று அதனை விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
அரசால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்றப்பட வேண்டும். ஜல்லிக்கட்டு விழா குழுவினர் விழாவிற்கான ஏற்பாடுகளை விழா நடைபெறுவதற்கு முன்னர் குறைந்தபட்சம் 24 மணி நேரத்திற்கு முன்பாக அனைத்து பணிகளையும் வழிகாட்டி நெறிமுறைகளில் தெரிவித்துள்ளவாறு பூர்த்தி செய்யும்பட்சத்திலேயே ஜல்லிக்கட்டு நடத்திட மாவட்ட நிர்வாகத்தால் இறுதி உத்தரவு வழங்கப்படும். விழா அமைப்பாளர்கள், விழாவில் பங்கேற்க உள்ள காளைகளுக்கு கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவர்களால் உரிய பரிசோதனை செய்யப்பட்டுள்ளதை உறுதிபடுத்திட வேண்டும். ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்க உள்ள காளைகள் மற்றும் வீரர்கள் குறித்த விவரங்களை அமைப்பாளர்கள், முன்னரே தெரிவித்து முன்அனுமதி பெறுதல் வேண்டும். பங்கேற்பாளர்கள் குறித்த விவரங்கள் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்தல் வேண்டும்.
விழா அமைப்பாளர்கள் விழாவில் பங்கேற்க உள்ள காளைகளுக்கு எவ்விதமான ஊக்கமருந்துகளோ (Enhancement Drugs) மற்றும் எரிச்சல் அளிக்கக்கூடிய பொருட்களையோ (Irritants) செலுத்தக்கூடாது. காளைகளின் மீது ஜிகினா தூவூதல், கண்களில் எலுமிச்சைசாறு பிழிதல், எண்ணெய் தடவுதல் கூடாது. விழா அமைப்பாளர்கள், ஜல்லிகட்டினை திறந்த வெளியில் நடத்திட வேண்டும். காளைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இடம் மருத்துவ பரிசோதனை செய்யும் இடம் காளை சேகரிப்பு மையம் ஆகிய இடங்களில் ஷாமியானா பந்தல் அல்லது கூரை அமைத்து காளைகளை வெயிலிலிருந்தும், மழையிலிருந்தும் பாதுகாக்க வேண்டும். காளைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இடம், காளை சேகரிப்பு மையம் மற்றும் தேவைப்படும் பகுதிகளில் கண்காணிப்பபு கேமராக்களை பொருத்தி நிகழ்வுகளை பதிவு செய்தல் வேண்டும்.
ஒரே தேதியில் விழா நடத்த விண்ணப்பிக்கப்படும் முதல் விண்ணப்பம் மட்டும் அந்த தேதியில் நிகழ்ச்சி நடத்த அனுதிக்கு எடுத்துக் கொள்ளப்படும். ஜல்லிக்கட்டு போட்டியின்போது காளைகளை துன்புறுத்தக்கூடாது. முன் அனுமதி பெறாத அமைப்பாளர்களுக்கு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்படமாட்டாது. ஜல்லிக்கட்டு போட்டிகளை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டு காளைகள் மாடுபிடி வீரர்கள் இரண்டு பேரும் ஜல்லிக்கட்டு போர்டல் மூலமே முன்பதிவு செய்ய வேண்டும். எனவே விழாக்குழுவினர் அரசின் நிலையான வழிகாட்டு விதிமுறைகளை கடைபிடித்து ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்திட போதிய ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தகவலை கலெக்டர் அருணா, தெரிவித்துள்ளார்.
The post ஜல்லிக்கட்டு, வடமாடு, மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்கு ஒரு மாதத்திற்கு முன்பே ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் appeared first on Dinakaran.