- புதிய ஆண்டு
- காலாப்பட்டு
- புதுப்பட்டு
- விழுப்புரம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- இலங்கை
- விஜயகுமார்-புவனேஸ்வரி
காலாப்பட்டு, ஜன. 3: விழுப்புரம் மாவட்டம் கீழ் புத்துப்பட்டு அருகே இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாம் செயல்பட்டு வருகிறது. இங்கு இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் வந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். அங்கு விஜயக்குமார்- புவனேஸ்வரி தம்பதியர்கள் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். அவரது மகன் பிரேம்குமார் (19). இவர் பணிரென்டாம் வகுப்பு முடித்து பெயிண்டராக வேலை செய்து வந்தார்.
இவர் கடந்த டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவு புத்தாண்டு அன்று கீழ்புத்துப்பட்டிலிருந்து புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக தனது இருசக்கர வாகனத்தில் புதுச்சேரி கடற்கரைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது புதுச்சேரி சின்ன காலாப்பட்டு பிள்ளைச்சாவடி அருகே சாலையில் உள்ள பள்ளத்தில் அவர் ஓட்டிச்சென்ற பைக் விழுந்ததில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் புதுச்சேரி கனகசெட்டிகுளம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். அவருக்கு தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் நேற்று முன்தினம் மாலை திடிரென பிரேம்குமார் மூளைச்சாவு அடைந்தார்.
இதுகுறித்த தகவல் அவரது பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மூளைச்சாவு அடைந்த இளைஞனின் உடல் உறுப்புகளை அவரது பெற்றோர்கள் தானம் செய்ய விருப்பம் தெரிவித்தனர். இதையடுத்து நேற்று அவரது உடலை புதுச்சேரி மூளக்குளம் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அவரது கிட்னி, இதயம், நுரையீரல் ஆகியவற்றை தானம் செய்தனர். அதில் பிரேம்குமாரின் கிட்னி ஒன்று அரசு மருத்துவமனைக்கும் மற்றொன்று தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டது.
சென்னை மற்றும் ஹைதராபாத்திற்கு இதயம் மற்றும் நுரையீரல் ஆகியவை போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது. பிரேம்குமாரின் உடல் உறுப்புகள் தானம் மூலம் 5 பேர் பயன்பெற்று உள்ளனர். தனது மகன் மூளைச்சாவு அடைந்து இறந்தாலும் அவனது உடல் உறுப்புகள் தானம் மூலம் ஐந்து பேர்கள் பயனடைந்து வாழ்வது மகிழ்ச்சியளிக்கிறது. இதேபோல் மற்றவர்களும் உடல் உறுப்புகள் தானம் செய்ய முன் வர வேண்டும் என்று அவரது தந்தை விஜயக்குமார் உருக்கமாக கேட்டுக்கொண்டார்.
The post புத்தாண்டு கொண்டாட சென்ற போது பைக் விபத்து: மூளைச்சாவு அடைந்த இலங்கை அகதி வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் appeared first on Dinakaran.