×

திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தில் திமுக ஒன்றிய இளைஞரணி புதிய நிர்வாகிகள் நியமனம்: எம்எல்ஏவிடம் வாழ்த்து

திருத்தணி: திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள திமுக ஒன்றிய இளைஞரணி நிர்வாகிகளுக்கு, திருத்தணி எம்எல்ஏ எஸ்.சந்திரன் வாழ்த்து தெரிவித்தார். திமுக இளைஞரணியை வலுப்படுத்தும் வகையில், ஒன்றிய இளைஞரணி புதிய நிர்வாகிகளை அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் நியமித்தார். இதில் திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தில் உள்ள ஒன்றிய, நகர, பேரூர் திமுக இளைஞரணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். பின்னர், திருவள்ளூர் மேற்கு மாவட்டச் செயலாளர், திருத்தணி எம்எல்ஏ எஸ்.சந்திரனை திருத்தணியில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திருத்தணி கிரண் தலைமையில் புதிய நிர்வாகிகள் நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் எஸ்.சந்திரன் எம்எல்ஏ வாழ்த்து தெரிவித்தார். அப்போது, திமுகவின் வளர்ச்சியில் இளைஞரணி முக்கிய பங்கு வகித்து வருகிறது. இளைஞரணி நிர்வாகிகள் ஆர்வத்துடன் செயல்பட்டு, அரசின் திட்டங்கள் பொதுமக்களுக்கு விளக்கி தீவிர பிரசாரம் மேற்கொண்டு, கட்சியின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்றும், அதிகளவில் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களை உறுப்பினர்களாக சேர்க்க பாடுபட வேண்டும் என்றும் எம்எல்ஏ கேட்டுக்கொண்டார். இந்நிகழ்வில் திருவாலங்காடு மேற்கு ஒன்றிய செயலாளர் கூளூர் எம்.ராஜேந்திரன், திருத்தணி கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் ராஜேந்திரன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள் யுவராஜ், காளிதாஸ், துணை அமைப்பாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

The post திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தில் திமுக ஒன்றிய இளைஞரணி புதிய நிர்வாகிகள் நியமனம்: எம்எல்ஏவிடம் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : DMK Union Youth Wing ,Tiruvallur West district ,MLA ,Tirutani ,S. Chandran ,DMK ,Youth Wing ,Deputy Chief Minister ,Udhayanidhi Stalin ,Union Youth Wing… ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக...