×

வழிபாட்டில் சமத்துவம்

“ச்சீ..ச்சீ…என்ன நூஹே இது? நீ செய்வது
சரியா?”
“என்ன செய்து
விட்டேன்?”
“ஊரிலுள்ள தாழ்த்தப்பட்டவர்கள், இழிந்தவர்கள் எல்லாம் உன்னைச் சுற்றி இருக்கிறார்கள். அவர்களோடு எங்களையும் சேரச் சொல்கிறாயா? எங்களைவிடச் சிறப்பு வாய்ந்தவர்கள் யார்?”
“நான் என்ன செய்ய வேண்டும்?”“இந்த இழிவானவர்களை உன் சபையிலிருந்து இப்போதே வெளியே துரத்து.”
– இறைத்தூதர் நூஹ் நபிக்கும் அவருடைய சமுதாயத்தினரான ஆதிக்க ஜாதியினருக்கும் இடையே நடந்த உரையாடல்.

அந்த ஆதிக்க ஜாதியினருக்கு நூஹ்(அலை) அவர்கள் தந்த மறுமொழியை இறுதி வேதம் குர்ஆன் அழகாகப் பதிவு செய்துள்ளது.அந்த மறுமொழி இதுதான்- நூஹ் கூறினார்:“என் சமுதாயத்தினரே, யார் யார் என் அழைப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறார்களோ அவர்களை நான் விரட்டுபவன் அல்லன்.நிச்சயமாக அவர்கள் தங்கள் இறைவனைச் சந்திக்க இருக்கிறார்கள். நான் உங்களை அறியாமையில் உழலும் சமுதாயமாகவே காண்கிறேன்.“என் சமுதாயத்தினரே, நான் இவர்களை விரட்டிவிட்டால் இறைவனின் பிடியிலிருந்து என்னைக் காப்பாற்றுபவர் யார்? இதைக்கூட நீங்கள் புரிந்துகொள்ள மாட்டீர்களா?“யாரை உங்கள் கண்கள் இழிந்தவர்களாய்க் காண்கின்றனவோ அவர்களைக் குறித்து, ‘இறைவன் எந்த நன்மையையும் அவர்களுக்கு அளிக்கவில்லை’ என்றும் நான் கூறமாட்டேன். அவர்களின் நெஞ்சங்களில் உள்ளதை இறைவன் நன்கு அறிவான். அவ்வாறு கூறினால் நான் அக்கிரமக்காரனாகி விடுவேன்.” (குர்ஆன் 11:29-31)

அதாவது நூஹ் நபி காலத்திலேயே ஆதிக்க ஜாதிகளின் கொட்டம் கொடிகட்டிப் பறந்திருக்கிறது.நூஹ் நபி(அலை) ஆதிக்க ஜாதிகளுக்கு அடிபணியாமல் மனிதகுல சமத்துவத்தை நிலைநாட்டினார்.அதற்குப் பிறகு ஒவ்வோர் இறைத்தூதர் காலத்திலும் இதே கதைதான்.அடிமைகளாய் இருந்த இஸ்ரவேல் மக்களின் விடு தலைக்காகக் கொடுங்கோல் மன்னன் பிர்அவ்னையே மூஸா நபி(ஸல்) எதிர்த்துப் போராடினார்.

ஆம். இறைத்தூதர் மூஸா(அலை) மாபெரும் விடுதலை வீரர். இறுதித்தூதர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடமும் ஆதிக்க ஜாதியினரான குறைகள் அதைத்தான் கூறினர்.“முஹம்மதே, எங்களில் இழிந்தவர்களும் தாழ்ந்தவர்களும்தாம் உங்களைப் பின்பற்றுகிறார்கள். அவர்களை விரட்டினால் நாம் உங்களுடன் பேசத் தயாராக இருக்கிறோம்” என்றனர்.நபிகளார்(ஸல்) இசையவில்லை.“ஒருபோதும் எளிய மக்களை விரட்ட முடியாது” என்றார், உறுதியாக.மனிதகுல சமத்துவம், வழிபாட்டின் சமத்துவம் – இவையே இஸ்லாமிய வாழ்வியலின் உயிர்மூச்சு.உள்ளூர்ப் பள்ளிவாசலில் இருந்து உலகின் முதல் ஆலயமான மக்காவிலுள்ள கஅபா ஆலயம் வரை இந்தச் சமத்துவத்தை இன்றும் உயிர்த்துடிப்புடன் காணலாம்.
– சிராஜுல் ஹஸன்.

இந்த வாரச் சிந்தனை

“மனிதர்கள் அனைவரும் சீப்பின் பற்களைப்போல் சமமானவர்கள்.”- நபிமொழி

 

The post வழிபாட்டில் சமத்துவம் appeared first on Dinakaran.

Tags : Noah ,
× RELATED காசா மக்களின் உயிர்நாடியாக...