×

ஆண்டாள் அருளிய அமுதம்

கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ… என்கிற பாசுர வரியில், ஆண்டாள் இங்கு பகவானின் திருவாய் பற்றிய மூன்று விஷயங்களை சுட்டிக் காட்டுகிறாள். முதலில் அந்தத் திருவாயில் இருக்கக்கூடிய பரிமளம். அதைத்தான் இங்கு கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ என்று சாதிக்கிறாள். அதற்கடுத்ததாக அந்த திருவாயினுடைய சிவந்த உதடுகளினுடைய தன்மை. திருப்பவளச் செவ்வாய். அதற்கடுத்து மூன்றாவதாக தித்தித்திருக்குமோ… அதனுடைய சுவை. இப்படியாக காட்டிக் கொடுத்துக் கொண்டே வந்து…

அடுத்த வரிகளில் …
மருப்பொசித்த மாதவன்றன்
வாய்ச்சுவையும் நாற்றமும்,
விருப்புற்றுக் கேட்கின்றேன்
சொல்லாழி வெண்சங்கே!

மருப்பொசித்த மாதவன் தன் வாய்ச் சுவையும் நாற்றமும் என்று சுவையையும் மணத்தையும்தான் குறிப்பிடுகிறாளே தவிர, இதற்கு முன்னால் சொன்ன திருப்பவளச் செவ்வாய் என்பதில் வரும் நிறம் பற்றிய விஷயத்தை விட்டுவிட்டு, சுவையையும், மணத்தையும் மட்டுமே குறிப்பிடுகிறாள். இங்கு ஏன் இப்படிக் குறிப்பிட வேண்டும் என்று நமக்கு கேள்வி எழலாம். கற்பூரம் நாறுமோ கமலப் பூ நாறுமோ… என்று கேட்டபோது அங்கு அது கேள்வியாகத்தான் (question) இருந்தது. இது இப்படி இருக்குமோ அப்படி இருக்குமோ என்று தெரியாமல் கேட்கக்கூடிய ஒரு கேள்வியாக இருந்தது. தித்தித்திருக்குமோ என்று சுவையைப்பற்றி கேட்கும்போதும் தெரியாமல் கேட்கக் கூடிய கேள்வியாகத்தான் இருந்தது.

ஆனால், திருப்பவளச் செவ்வாய் என்று சொல்லும்போது அங்கு எந்த கேள்வியும் எழவில்லை. அது திருப்பவளச் செவ்வாய்தான்… நேரடியாக சொல்லப்பட்டு விட்டது. இதிலிருந்து என்ன தெரிகிறதெனில், பகவானை தரிசிக்கக் கூடியவர்கள் எல்லோருக்குமே திருப்பவளச் செவ்வாய் என்கிற அந்த நிறம் தெரியும். அது மிகவும் வெளிப்படையான விஷயம். ஏனெனில், ஆழ்வாரே… ‘பச்சை மா மலைபோல் மேனி.. பவள வாய் கமலச் செங்கண்…’ என்றும், ‘படியாய் கிடந்து உன் பவளவாய் காண்பேனோ…’ என்று பாடிவிட்டார். இப்படி எல்லோருமே பாடியிருக்கிறார்கள். எனவே, இந்தத் திருப்பவள செவ்வாய் என்பது வெளிப்படையான விஷயம். அது எல்லோருக்கும் தெரியுமே… புதியதாக ஒன்றும் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை.

மேலும், நான் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் அதிமுக்கியத்துவம் பெற்றதாக இருக்க வேண்டும். அதி அந்தரங்கமாக இருக்க வேண்டும். அதனால், திருப்பவள செவ்வாய் என்று பாடினால் கூட… அந்த நிறத்தைப்பற்றிய விஷயங்களையெல்லாம் விட்டுவிட்டு வாய்ச் சுவையையும் நாற்றமும் என்று சொல்லி, அந்த மணத்தையும் சுவையையும் மட்டும்தான் சங்காழ்வானிடம் கேட்கிறாள். எப்படியெனில், மருப்பொசித்த மாதவன்தன் வாய்ச்சுவையும் நாற்றமும், விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே! என்று கேட்கிறார். சங்காழ்வானை நோக்கி நீ கையிலே இருக்கிறாய். சங்க நாதம் எழுப்பும்போது உன்னை வாயில் வைத்து ஊதுகின்றான். உனக்கு அது நன்கு தெரியும். நீ எனக்கு அதைச் சொல்ல வேண்டுமென்று கேட்கிறாள்.

இப்போது இதை வேறு ஒரு நிலையில் வைத்துப் பார்ப்போம் வாருங்கள். சங்காழ்வானிடம் ஆண்டாள் கேட்கிறாள் என்று பார்த்தோம். சங்காழ்வான் நாத சொரூபம். பகவான் நாத சொரூபமாக இருக்கக் கூடிய சங்காழ்வானை ஊதும்போது அவனால் வெளிப்படுத்தப்படுவது பிரணவ நாதம். அப்படி வெளிப்படுத்தும்போது ஆண்டாள் சங்காழ்வானை நோக்கி இரண்டு விஷயங்களை கேட்கிறாள். ஒன்று வாய்ச்சுவை. இன்னொன்று நாற்றம். அதாவது பரிமளம்… சுவை. இங்கு பகவானின் திருவாய் பரிமளம் என்றாலே மூச்சைத்தான் குறிக்கும். கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ என்பதின் சூட்சுமமான விஷயமே இதுதான். தித்தித்திருக்குமோ என்று வாய்ச் சுவையைக் கேட்கும்போது அங்கு ஸ்தூலமாக விஷயம் வெளிப்படுகின்றது.

அது என்னவெனில், மணத்திற்கும் சுவைக்கும் சிறிய வேறுபாட்டை பார்க்க வேண்டும். மணம் கொஞ்சம் சூட்சுமமானது. சுவையானது கொஞ்சம் ஸ்தூலமானது. எப்படியெனில், மணம் என்பது மூச்சுக் காற்றிலிருந்து வெளிப்படுகின்றது. சுவை என்பது அனுபவிக்கும்போதுதான் தெரிகிறது. இந்த இரண்டும் நமக்கு எதைக் காண்பித்துக் கொடுக்கின்றது என்று பார்த்தால், மணம் என்று சொல்லும்போது அது பகவானுடைய மூச்சுக்காற்று என்று சொல்கிறோம். பகவானுடைய மூச்சுக்காற்று எது என்றால், பகவானுடைய மூச்சுக்காற்று வேதம் என்று சாஸ்திரம் சொல்கிறது. வேதத்தை தன்னுடைய மூச்சுக்காற்றாக வைத்திருக்கிறார். வேதமானது அவனுடைய மூச்சாக வெளிப்படுகிறது. வேதத்தை பகவான் தம்முடைய வாய் திறந்து சொன்னதாகத் தெரியவில்லை.

அப்படி வெளிப்பட்ட வேதத்தை ரிஷிகள், முனிவர்கள் வாங்கி நமக்கு மந்திரங்களாக அருளியிருக்கிறார்கள். இப்படியாக வேதம், வேதாந்தபாகமாக உபநிஷதம் என்று தொடர்ந்து வருகின்றது. ஆனால், இந்த வாய்ச் சுவை என்று சொல்லும்போது அது கொஞ்சம் ஸ்தூலமானது. நாம் ஏதோ ஒரு இனிப்பு சாப்பிடுகிறோம் எனில், வாயருகே கொண்டு போகும்போதே அந்த இனிப்பினுடைய மணத்தை நாம் முதலிலேயே அனுபவித்து விடுகின்றோம். இதற்குப் பிறகு சாப்பிடும்போதுதான் அதன் சுவை தெரியும். இதுபோல வேதத்தை பகவான் தன் மூச்சினால் சூட்சுமமாக வெளிப்படுத்தி விடுகின்றான். அப்படி வெளிப்படுத்திய பகவான் நமக்காக ஸ்தூலமாக சில விஷயங்களை வெளிப்படுத்துகிறான். எப்படியெனில், வேதத்தை சூட்சும மூச்சாகச் சொன்னவன், சில விஷயங்களை திருவாய் திறந்து, திருவாய் மலர்ந்து சில விஷயங்களைச் சொல்கிறான்.

அது வாய்ச் சுவை. அப்படி திருவாய் மலர்ந்து அவன் என்ன சொன்னான் எனில், முதன் முதலாக பத்ரிகாஸ்ரமத்தில் தானே குரு சிஷ்யர்களாக, நர நாராயணர்களாக இருந்து, நாராயணன் என்கிற குருவாக இருந்து வாய் திறந்து அஷ்டாக்ஷரம் என்கிற எட்டெழுத்து திருமந்திரத்தை – ஓம் நமோ நாராயணாய என்பதை நரனாகிய சிஷ்யனுக்கு வாய் திறந்து சொன்னான். அது முதல் வாய்ச் சுவை. அதற்கு அடுத்ததாக திருப்பாற்கடலில், பெரிய பிராட்டியான மகாலட்சுமிக்கு த்வயம் மந்திரத்தை தானே திருவாய் மலர்ந்து உபதேசித்தான். இது இரண்டாவது வாய்ச்சுவை. அதற்கடுத்து குரு க்ஷேத்திரத்தில் அர்ஜுனனுக்கு சரம ஸ்லோகத்தை தானே வாய் திறந்து உபதேசித்தான்.

இது மூன்றாவது வாய்ச்சுவை. வேதமானது பகவானின் உஸ்வாஸ நிஸ்வாஸமாக… அதாவது உள் மூச்சாகவும் வெளிமூச்சாகவும் இருக்கிறது. அதை ரிஷிகள் தரிசித்து வேதமாகவும் உபநிஷதங்களாகவும் வெளிப்படுத்தினார்கள். அப்படி மூச்சாக வெளிப்படுத்தப்பட்ட வேதமானது பகவானின் திருவாயின் மணம்… பரிமளம் என்று எடுத்துக் கொண்டால், அவனே வாய் திறந்து சொன்ன உபதேசங்களை… அவனே வாய் திறந்து சொன்ன விஷயங்களை அதிலும், முக்கியமாக திருமந்திரம், த்வயம், சரம ஸ்லோகம் என்கிற மூன்றையும் ஸ்வயம் திருவாய் மலர்ந்து சொன்னதால் அங்கு சுவையாகவும் இருக்கிறது.(தொடரும்)

ஸ்ரீ தத்தாத்ரேய சுவாமிகள்

The post ஆண்டாள் அருளிய அமுதம் appeared first on Dinakaran.

Tags : Andala ,Basura ,
× RELATED ஆண்டாள் அருளிய அமுதம்