×

இந்த வார விசேஷங்கள்

4.1.2025 – சனி தனுர் வியதி பாதம்

பித்ருக்களின் பரிபூரண ஆசியை பெற்றுத் தரும் தனுர்வியதிபாத வழிபாடு எக்கடனிருப்பினும் பித்ரு கடனாகிய முன்னோர் கடன் கூடாதெனும் வேதத்தின் சொல் வழிநடக்க. நமது பித்ருகளின் கோபம், சாபம் நமக்கு ஏற்படாமல் அவர்களை திருப்தி படுத்த ஒரு சிறந்த நாளாக தனுர்வியதீபாதம் (மார்கழி வியதிபாத யோகம்) என்னும் ஒரு விசேஷநாள் இன்று மார்கழி மாதம் 20ம் நாள் 04.01.2025 சனிக் கிழமை முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்ய வேண்டும். ஒரு வருடத்துக்கு மொத்தம் 96 தர்ப்பணங்கள் செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறது சாஸ்திரம். 12 மாதங்களின் பிறப்பு, 12 அமாவாசைகள், புரட்டாசியில் வரும் மகாளயபட்ச 16 நாட்கள், கிரகணங்கள் என்பது உள்ளிட்ட 96 தர்ப்பணங்கள் உள்ளன. அதில் ஒருநாள் இது. தாம்ரப உணி நதி கரையில் உள்ள சேரன்மாதேவி என்னும் ஊரில் உள்ள வியதீபாத கட்டம் என்கிற இடத்தில் சங்கல்ப ஸ்நானம், மற்றும் பித்ருசாந்தி, பித்ரு தர்ப்பணம் செய்து அங்கு வீற்றிருக்கும் ஸ்ரீ பக்தவத்சல பெருமாள் கோயிலில் வழிபாடு செய்து, மற்றும் அருகே உள்ள அருள்தரும் வைத்திய நாதஸ்வாமி, திரு அம்மைநாத ஸ்வாமி, ஆகியோரை தரிசிப்பதும் சிறப்பான ஒன்றாகும். இங்கு பித்ரு தர்ப்பணம் செய்வது வடநாட்டில் கயா தர்ப்பணத்துக்கு இணையானதாக சொல்லப்படுகிறது. சேரன்மாதேவி திருநெல்வேலியிலிருந்து 20கி.மீ. தொலைவில் உள்ளது.

4.1.2025 – சனி நகரத்தார் பிள்ளையார் நோன்பு

இன்று சஷ்டி விரத நாள். முருகப் பெருமானுக்குரிய சிறப்பான விரதங்களில் ஒன்று சஷ்டி விரதம். ஐப்பசி மாதத்தில் வரும் கந்தசஷ்டி விழாவின் போதே லட்சக்கணக்கானவர்கள் விரதம் இருந்து, முருகனை வழிபடுவார்கள். ஆனால், கந்தசஷ்டி காலத்தில் மட்டுமின்றி மாதந்தோறும் வரும் சஷ்டி திதிகளிலும் முருகனுக்கு விரதம் இருந்து வழிபடலாம். அதோடு இன்று நகரத்தார் பிள்ளையார் நோன்பு. பதினைந்து நூற்றாண்டுகளுக்கு முன் நமது நகரத்தார் காவேரிம் பூம் பட்டினத்தில் வாழ்ந்து மரகத விநாயகரை (மரகத விநாயகர்) வழிபட்டனர். காவிரிப் பூம் பட்டினத்தைச் சேர்ந்த ஒரு நகரத்தார் பெருமான், முதல் மனைவி இறந்தபின், இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அந்த மனைவியின் வைர மோதிரம் தொலைந்தது. தன் வளர்ப்பு மகள்தான் குற்றவாளி என்று எண்ணி நிந்திக்க அந்த ஏழைப்பெண் மரகத விநாயகர் கோயிலுக்குச் சென்று, மரகத விநாயகரை வணங்கி, தான் குற்றமற்றவள் என்பதை நிரூபிக்க வேண்டினாள். கோயிலிலே விரதம் இருந்தாள். விரதத்தின் ஒவ்வொரு நாளும் அவள் புடவையில் இருந்து ஒரு நூலை எடுத்து, அதை ஒரு நூலாக உருவாக்கி, அதில் மாவிளக்கு ஏற்றினாள். மோதிரம் கிடைத்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை. 21ஆம் நாள் காலையில் “இந்த 21ஆம் நாளின் முடிவில் காணாமல் போன மோதிரம் கண்டுபிடிக்கப் படாவிட்டால், என் வாழ்க்கையை முடித்துக் கொள்வேன்.’’அன்று மாலை, மாலைப் பூசைக்கு வந்த நகரத்தார்கள், மாவிளக்குகளில் மாவிளக்கு நீண்ட வரிசையாக எறும்புகள் வெளியேறுவதை பார்த்தனர். எறும்புகளின் நீண்ட வரிசையை பின்தொடர்ந்தனர். இறுதியாக சிறுமியின் வீட்டில் எறும்பு துளையில் முடிந்தது. எறும்பு துளைக்குள் பார்த்தபோது காணாமல் போன வைர மோதிரம் கண்டனர். அனைவரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். மரகத விநாயகர் கோயிலில் அனைத்து நகரத்தார்களும் கூடி, சிறுமியின் குற்றமற்ற தன்மையை நிலைநாட்டியதற்காக மரகத விநாயகருக்கு நன்றி தெரிவித்து பிரார்த்தனை செய்தனர். இழந்த அனைத்தையும் மீட்பவர் என்று மரகத விநாயகரைப் போற்றினர். நகரத்தார் சமூகத்தில் மேற்கூறிய மனதைத் தொடும் நிகழ்வை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அதைக் கொண்டாட முடிவு செய்து அதற்குப் பிள்ளையார் நோன்பு என்று பெயரிட்டனர். நோன்பு திரு கார்த்திகை நாளில் தொடங்கி 21 நாட்கள் நீடிக்கும். 21 நாட்களில் அவர்கள் தினசரி பிரார்த்தனை செய்ய வேண்டும் மற்றும் ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே சாப்பிட வேண்டும். திரு கார்த்திகைக்குப் பிறகு 21வது நாளில் சாஸ்திரம் சத்யத்துடன் (சஷ்டி – அமாவாசைக்குப் பிறகு ஆறாம் நாள் பிறை மற்றும் சதயம் நட்சத்திரத்தைக் குறிக்கும்) இணைந்தபோது நோன்பு முடிவடைகிறது.21 நாட்கள் பிரார்த்தனையில் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய துணியிலிருந்து ஒரு புதிய நூல் எடுக்கப்படுகிறது, மேலும் 21வது நாளில் இவ்வாறு சேகரிக்கப்பட்ட 21 நூல்களும் ஒன்றாக இணைக்கப்பட்டு நீண்ட திரியை உருவாக்குகிறது. நீண்ட திரி பின்னர் சிறிய திரிகளாக வெட்டப்பட்டு அரிசி மாவு, சர்க்கரை மற்றும் நெய் ஆகியவற்றால் செய்யப்பட்ட மாவின் மீது நடப்பட்டு சிறிய கூம்புகளாக வடிவமைக்கப்படுகிறது. பிள்ளையாருக்குப் பிரார்த்தனை செய்த பிறகு, பிள்ளை யார் நோன்புப் பிரார்த்தனைக் கூட்டத்தில் இருக்கும் நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் விளக்கேற்றப்பட்ட கூம்பு மாவை வழங்கப்படுகிறது.

6.1.2025 – திங்கள்நாச்சியார் கோயில் கல் கருட சேவை

கும்பகோணம் அருகேயுள்ள நாச்சியார் கோவிலில் இன்று கல் கருட சேவை. ஒரே கல்லால் ஆன கருடர் இந்த ஆலயத்தில் தனி சந்நதியில் அருள்பாலிக்கிறார். இவருக்கு நாள் தோறும் 6 கால பூஜை நடைபெறுகிறது. இந்த கல் கருட பகவானை 7 வியாழக்கிழமை தொடர்ந்து வழிபடுவதன் மூலம் நினைத்தது நிறைவேறும். பங்குனி, மார்கழி என ஆண்டுக்கு இரு முறை மட்டுமே இந்த கல் கருடர் வெளியே வருவார். வெளியே வரும் போது வெறும் 4 பேர் மட்டும் சுமப்பார்கள். அதை தொடர்ந்து 8, 16, 32, 64, 128 பேர் என கருட பகவானின் எடை அதிகரித்துக் கொண்டே போகும். அதே போல் மீண்டும் சந்நதியை சென்றடையும் போது கருடரை தூக்குவோரின் எண்ணிக்கை 128, 64, 32, 16, 8, என குறைந்து சந்நதியை அடையும் போது 4 பேர் தூக்கி செல்வார்கள். இந்த அதிசயம் வேறு எங்கும் கிடையாது.

7.1.2025 – செவ்வாய் வாயிலார் நாயனார் குரு பூஜை

``மறவாமையால் அமைத்த மனக்கோயில் உள்ளிருத்தி
உறவாதி தனையுணரும் ஒளி விளக்குச் சுடர் ஏற்றி
இறவாத ஆனந்தம் எனும் திருமஞ்சனம் ஆட்டி,

அறவாணர்க்கு அன்பு என்னும் அமுது அமைத்து அர்ச்சனை செய்வார்’’.ஆம். சிவாலயமே செல்லாமல், தலைசிறந்த சிவனடியராக விளங்கியவர் ஒருவர் உண்டென்றால் அவர் வாயிலார் நாயனார்தான். இறைவனை மறவாமல் மனதில் இருத்தி, ஞான விளக்கு ஏற்றி ஆனந்தம் என்னும் திருமஞ்சனம் ஆட்டி, அன்பு என்னும் அமுது சமைத்து நைவேத்தியமும் அர்ச்சனையும் என சிவ வழிபாட்டை நெடு நாட்கள் செய்து அதன் பயனாகிய இன்பத்தை நுகர்ந்து அமைதியான வாழ்க்கையில் சிறந்து விளங்கினார். சிவபெருமானும் இவரது தூய்மையான அந்தரங்க பக்தியை மெச்சி அவரை ஒரு மார்கழி மாதம் ரேவதி நட்சத்திரம் கூடிய நன்னாளில் தனது சிவபதத்துக்கு அழைத்துக் கொண்டார். அந்த நாள் இன்று.

7.1.2025 – செவ்வாய் பௌமாஸ்வினி விரதம்

செவ்வாய்க் கிழமையும் செவ்வாயின் ராசியான மேஷத்தில் உள்ள அஸ்வினி நட்சத்திரமும் கூடுவது மிகவும் சிறப்பு. இந்த நாளை பௌமாஸ்வினி நாள் என்று கூறுவர். வருடத்தில் ஒரு முறையோ இரு முறையோ வரும். `பௌம்’ என்றால் செவ்வாய் என்று பொருள். பௌம் + அஸ்வினி = பௌமாஸ்வினி. இப்படிப்பட்ட நாளில் லட்சுமி நரசிம்மரை வழிபட்டால் செவ்வாய் தோஷம், விபத்து தோஷம், ரத்த சம்மந்தமான நோய்கள் விலகி நல்ல உடல் ஆரோக்கியமும் கடன் தொல்லைகள் நீங்கி நல்ல தனலாபமும் பூமி வாங்கும் யோகமும் ஏற்படும். இந்த நாளில் லட்சுமி நரசிம்மரின் 32 எழுத்து மூலமந்திரமும் ஸ்ரீ லட்சுமி நரசிம்மரின் காயத்ரி மந்திரமும் ருணவிமோசன மந்திரமும் ஜெபிக்கலாம். துன்பங்களிலிருந்தும் விடுதலை பெற்று ஸ்ரீ லட்சுமி நரசிம்மரின் அருளால் சகல துறைகளிலும் முன்னேற்றம் பெற்று வளமான வாழ்க்கையைப் பெறலாம்.ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் மூல மந்த்ரம் “உக்ரம் வீரம் மஹா விஷ்ணும், ஜ்வலந்தம்சர்வதோ முகம் ந்ரஸிம்மம், பீஷணம் பத்ரம் ம்ருத்யும் ம்ருத்யும் நமாம் யஹம்’’

10.1.2025 – வெள்ளி வைகுண்ட ஏகாதசி

இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி மஹாலட்சுமிக்கு உரிய வெள்ளிக் கிழமை வருகிறது. சுக்கிரனுக்குரிய நாளில் சூரிய சந்திரர்களுக்கு உரிய கார்த்திகை ரோகினி கலந்த நட்சத்திரத்தில் வருவது இன்னும் சிறப்பு. மாதங்களில் நான் மார்கழி என்றான் கண்ணன். மார்கழி மாதம் என்றாலே அது பெருமாளுக்குரியது அல்லவா. அப்படிப்பட்ட மார்கழியில் வளர்பிறையில் முக்கியமான நாள் வைகுண்ட ஏகாதசி. பெருமாள் பக்தர்களுக்கு வைகுண்ட ஏகாதசி மிகவும் முக்கியமான திருநாள். அன்றைய நாளில் விரதமிருந்து கண்விழித்து பெருமாளை தரிசனம் செய்வது சிறப்பாகக் கருதப்படுகிறது. காயத்ரிக்கு ஈடான மந்திரமில்லை, தாய்க்குச் சமானமான தெய்வமில்லை. காசிக்கு அதிகமான தீர்த்தமில்லை. ஏகாதசிக்கு சமமான விரதமில்லை என்று அக்னி புராணத்தில் கூறப்பட்டுள்ளது. விரதங்களில் அரசன் ஏகாதசி. அந்த ஏகாதசிகளின் அரசன் வைகுண்ட ஏகாதசி. இந்த நாளில் விரதம் இருப்பவர்களுக்கு வைகுண்ட நாதனே பரமபத வாசலைத் திறந்து வைத்து, அருள் பாலிப்பார் என்பது ஐதீகம். வைகுந்தம் இப்படித்தான் கிடைக்கும் என்பதை, பெருமாள் நமக்குக் காட்சிப்படுத்தி, நம்மை வைகுண்டப் பிராப்திக்கு தகுதியான ஒரு வாழ்க்கையை வாழச் சொல்லிக் கொடுக்கும் ஏகாதசிக்கு “வைகுண்ட ஏகாதசி” என்று பெயர். ஏகாதசிக்கு முதல் நாள் தசமி அன்று பகலில் ஒரு வேளை மட்டும் உணவை சாப்பிட வேண்டும். ஏகாதசி நாளில் முழுமையாகப் பட்டினி கிடக்க வேண்டும். இரவு கண் விழித்து திருமால் சரிதங்களையும் ஆழ்வார் பாசுரங்களையும் கேட்கலாம் பாராயணம் செய்யலாம். மறுநாள் துவாதசியில் அதிகாலையில், கோவிந்தனின் நாமம் சொல்லி சுண்டைக்காய், நெல்லிக்கனி, எளிய அகத்திக் கீரை சேர்த்த உணவை உண்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். அன்றும் பகலில் உறங்காமல் இருந்து மாலை சூரியன் மறைந்த பின்தான் உறங்க வேண்டும். இந்தியாவில் மட்டுமல்ல, எங்கெங்கெல்லாம் பெருமாள் கோயில் உண்டோ, அத்தனை பெருமாள் கோயில்களிலும், வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா நடைபெறும். பெரும்பாலான கோயில்களில் வடக்கு பகுதியில் ஒரு வாசல் இருக்கும். அந்த வாசலுக்கு பரமபதவாசல் என்று பெயர். வைகுண்ட ஏகாதசி அதிகாலையில் பெருமாள் பரமபதவாசல் வழியாகத் தான் புறப்பாடு கண்டருள்வார். பரமபதவாசல் திறப்பு என்று சொல்வார்கள். இந்த ஏகாதசி விரதம் இருப்பவர்களுக்கு பரமபதவாசல் தானே திறக்கும் என்பது பொருள். அன்று இரவு கண்விழித்து ‘பரமபத சோபானம்’ என்னும் பரம்பரை விளையாட்டு விளையாடலாம் என்பது மற்றொரு சிறப்பு!

5.1.2025 – ஞாயிறு – திருக்குற்றாலம் குற்றாலநாதர் வெள்ளிச் சப்பரத்தில் வீதி உலா.
6.1.2025 – திங்கள் – மதுரை நவநீத கிருஷ்ணன் புறப்பாடு.
7.1.2025 – செவ்வாய் – குரங்கணி முத்து மாரியம்மன் புறப்பாடு.
9.1.2025 – வியாழன் – கார்த்திகை விரதம்.
9.1.2025 – வியாழன் – திருப்போரூர் முருகன் பாலாபிஷேகம்.

விஷ்ணுபிரியா

The post இந்த வார விசேஷங்கள் appeared first on Dinakaran.

Tags : Sani Tanur Vaithi Bhadam ,Bhadam ,Bhadam Bhadam Pritrukh ,Pritru ,
× RELATED சேலம் ராமர் பாதம் கோயிலுக்கு செல்ல...