×

தமிழ்நாடு எல்லையில் கழிவுகளை கொட்டிய மருத்துவமனை, ரிசார்ட் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? : கேரள அரசுக்கு தீர்ப்பாயம் கேள்வி!!

சென்னை : தமிழ்நாடு எல்லையில் மருத்துவ கழிவு கொட்டிய மருத்துவமனைகள், உணவு கழிவு கொட்டிய ரிசார்ட் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது. கேரள மாநிலத்தில் அன்றாடம் சேரும் மருத்துவக்கழிவுகள், அந்த மாநில எல்லையை ஒட்டி உள்ள தமிழக மாவட்டங்களில் கொட்டப்படுவது தொடர் கதையாகி வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் நெல்லை மாவட்டம் கோடகநல்லூர், நடுக்கல்லூர் பகுதிகளில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையத்திலிருந்து கொண்டுவரப்பட்ட அபாயகரமான மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்டன. இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து விசாரித்த தென்மண்டல பசுமை தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, உறுப்பினர் சத்யகோபால் அமர்வு, கேரள மருத்துவக்கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் அங்குள்ள மருத்துவ கழிவுகளை தமிழகத்தில் கொட்ட வேண்டிய அவசியம் என்ன? என்பது குறித்து கேரள மாநில அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்டனர். இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, கேரள மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், கழிவுகள் கொட்டப்பட்ட இடங்களை கேரள மாநில உயர் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்ததாகவும் கழிவுகளை கொட்டிய சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கும் உணவு கழிவுகளை கொட்டிய ரிசார்ட்க்கும் விளக்கம் கேட்டு ஷோக்காஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “இது ஒரு கண்துடைப்பு நடவடிக்கை, கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கேரளாவின் இது போன்ற செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்,”என்று தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள், “தமிழ்நாடு எல்லையில் மருத்துவ கழிவு கொட்டிய மருத்துவமனைகள், உணவு கழிவுகளை கொட்டிய ரிசார்ட் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?. மருத்துவமனை, ரிசார்ட்டை ஏன் மூடக்கூடாது?.கேரளா கழிவுகளை கொட்டுவதை நிறுத்த வேண்டும்; தமிழ்நாடு அரசு மாநில எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். மருத்துவமனை, ரிசார்ட் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என ஜனவரி 20ம் தேதிக்குள் பதிலளிக்க கேரளா அரசுக்கு உத்தரவிடுகிறோம். நடவடிக்கை எடுக்காவிட்டால் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பிக்க நேரிடும்,”இவ்வாறு எச்சரித்தனர்.

The post தமிழ்நாடு எல்லையில் கழிவுகளை கொட்டிய மருத்துவமனை, ரிசார்ட் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? : கேரள அரசுக்கு தீர்ப்பாயம் கேள்வி!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu border ,Kerala government ,Chennai ,Southern Green Tribunal ,Tamil Nadu ,Kerala ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு எல்லையில் மருத்துவ கழிவு...