சேலம்: தமிழகத்தில் கடந்தாண்டில் மட்டும் 266 பேர் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர். 1,484 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனங்களில் செல்பவர்களால் தினமும் ஏராளமான சாலை விபத்துகள் நிகழ்கிறது. இதனால் விலை மதிப்பில்லாத உயிரை இழக்கும் நிகழ்வுகளும் நடந்து வருகிறது. விபத்து மற்றும் தீக்காயங்களால் ஏராளமான நோயாளிகளுக்கு உடல் உறுப்பின் தேவையும் அதிகம் ஏற்படுகிறது. ஆனால், உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை மிக குறைந்த அளவிலேயே இருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 2008ம் ஆண்டு கலைஞரால் உடல் உறுப்பு தான திட்டம் தொடங்கப்பட்டது. தொடர்ந்து 2015ம் ஆண்டு பெயர் மாற்றப்பட்டு, தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையமாக செயல்பட்டு வருகிறது.
இதன் மூலம் சம்பந்தப்பட்ட குடும்பத்தினரின் ஒப்புதலோடு உயிரிழந்தவர்களின் இதயம், கல்லீரல், நுரையீரல், சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புகள், மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான நோயாளிகள் மறுவாழ்வு பெற்று வருகின்றனர். இந்நிலையில் முதல்வர், கடந்த 2023, செப்டம்பர் 23ம் தேதி உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு சார்பில் மரியாதை அளிக்கப்படும் என அறிவித்திருந்தார். அதனடிப்படையில் மூளைச்சாவு அடைந்து, உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதை செய்யும் திட்டம் தொடங்கப்பட்டது. இதுகுறித்து சுகாதாரத்துறையினர் கூறியதாவது: தமிழகத்தில் உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என்ற அறிவிப்புக்கு பிறகு, உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.
இதுவரை உடல் உறுப்பு தானம் செய்த 326 நபர்களுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. கடந்தாண்டில் மட்டும் 266 பேர் உடல் உறுப்புகளை தானம் செய்ததில், 1,484 உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் பெரிய அளவிலான அறுவை சிகிச்சைகள் 853, சிறிய அளவிலான அறுவை சிகிச்சைகள் 631 ஆகும். சிறுநீரகம் 452, கல்லீரல் 208, இருதயம் 94, நுரையீரல் 87 ஆகிய மாற்று அறுவை சிகிச்சைகளும் செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்த நன்கொடையாளர்கள் 178 பேர் வழங்கிய உடல் உறுப்புகள் மூலம், 1000 உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது. 2008ம் ஆண்டு திட்டம் ெதாடங்கப்பட்டதில் இருந்து 2,053 பேர் உடல் உறுப்பு தானம் செய்துள்ளனர். தற்ேபாது வரை, 12 ஆயிரத்து 104 உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது.
14 ஆயிரத்து 300க்கும் மேற்பட்டோர் உடல் உறுப்பு தானம் செய்ய பதிவு செய்துள்ளனர். இருப்பினும் சிறுநீரகத்திற்காக 7,257 பேரும், கல்லீரல் 505, நுரையீரல் 57, இருதயம் 69, கை மாற்று அறுவை சிகிச்சைக்காக 23 பேர் காத்திருக்கின்றனர். 6 பேருக்கு நுரையீரல் மற்றும் இருதயமும், 3 பேருக்கு கணையமும் தேவைப்படுகிறது. கடந்த 2021ம் ஆண்டு வரை 14 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் மட்டுமே உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தது. சுகாதாரத்துறையின் தீவிர நடவடிக்கையால், தற்போது அனைத்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அல்லாத உறுப்பு மீட்பு மைய உரிமங்களுக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள 39 அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைகளிலும் மூளைச்சாவு கமிட்டி அமைக்கப்பட்டு பெரிய அளவில் பயன்பாட்டில் இருந்து வருகிறது.
The post கடந்தாண்டில் மட்டும் தமிழகத்தில் 266 பேர் உடல் உறுப்பு தானம்: 1,484 உடல் மாற்று அறுவை சிகிச்சைகள் appeared first on Dinakaran.