* முக்கிய இடங்களில் தீவிர வாகன தணிக்கை, பொதுமக்களுக்கு போலீசார் வேண்டுகோள்
செங்கல்பட்டு: புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு இசிஆர், ஓஎம்ஆர், ஜிஎஸ்டி சாலைகளில் உள்ள நட்சத்திர ஓட்டல்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முக்கிய இடங்களில் தீவிர வாகன தணிக்கைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பாக புத்தாண்டை கொண்டாட பொதுமக்களுக்கு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். நாளை உலகம் முழுவதும் 2025 ஆங்கில புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்று பிற்பகல் முதல் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகளான இசிஆர், ஓஎம்ஆர், ஜிஎஸ்டி மற்றும் மாவட்டத்தின் பலமுக்கிய சந்திப்புகள் உட்பட மொத்தம் 30க்கும் மேற்பட்ட இடங்களில் காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபடுத்தப்படுவார்கள். மேலும் மாவட்டத்தில் சுமார் 180க்கும் மேற்பட்ட மிக முக்கிய இடங்கள், கோயில்கள், தேவாலயங்கள் போன்றவற்றிற்கு ரோந்து காவலர்கள் நியமித்து தீவிர ரோந்து பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்ட பாதுகாப்பு பணிக்கு ஒரு எஸ்பி, ஒரு ஏடிஎஸ்பி, 6 டிஎஸ்பிக்கள், 20 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 645 காவலர்கள் என மொத்தம் 671 காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். பொதுமக்கள் புத்தாண்டு கொண்டாடத்தின்போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் பின்வருமாறு: இசிஆர், ஓஎம்ஆர், ஜிஎஸ்டி சாலைகளில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் பீச் ரெஸார்ட்ச் உணவகங்களில் புத்தாண்டு கொண்டாட்டமாக நள்ளிரவு 12.30 மணிக்கு மேல் எந்தவித நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது. பொதுமக்களுக்கு இடையூறு மற்றும் ஆபத்து ஏற்படுத்தும் வகையில் பட்டாசு வெடித்தல் கூடாது.
இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் வரும் நபர்கள் மதுபோதையில் வாகனத்தை இயக்கக்கூடாது, மீறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நபர் மீது சட்டப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலைகள் முறையே திருவிடந்தை மற்றும் எஸ்எஸ்என் கல்லூரி அருகில் வாகன தணிக்கை செய்யப்பட்டு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான உணவகம், தங்கும் விடுதிகளில் முறையான முன்பதிவு பெற்ற நபர்கள் மட்டுமே மாமல்லபுரம் பகுதிக்கு அனுமதிக்கப்படுவர்.
இரண்டு சக்கர வாகனத்தை இயக்குபவரும், பின்னால் அமர்ந்திருப்பவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிந்திருக்க வேண்டும். நான்கு சக்கர வாகனத்தை இயக்குபவர் சீட் பெல்ட் அணிந்திருக்க வேண்டும். மீறுபவர்கள் மீது தக்க வழக்குப்பதிவு செய்யப்படும். இளைஞர்கள் புத்தாண்டை கொண்டாடும் விதமாக பெண்களை கேலி மற்றும் கிண்டல் செய்வதை தவிர்க்க வேண்டும். மீறும் நபர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இசிஆர், ஓஎம்ஆர், ஜிஎஸ்டி சாலைகளில் புத்தாண்டு கொண்டாடும் விதமாக வாகன பந்தயம் மற்றும் சாகசத்தில் ஈடுபடக்கூடாது.
மீறும் நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வாகனத்தை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும். மேலும் புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்கள் திருவிடந்தை முதல் கடப்பாக்கம் வரையிலான கடற்கரை பகுதிகளில் கடலில் இறங்கி குளிக்கவும் மற்றும் படகில் கடலுக்குள் செல்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது. மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து படகுகள் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும். இந்த பண்டிகை நாட்களை மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் கொண்டாடி, எவ்வித அசம்பாவிதமும் இன்றி கடந்து செல்ல காவல் துறைக்கு ஒத்துழைப்பு நல்குமாறு செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கேட்டுக்கொள்ளப்படுகிறது.
காஞ்சிபுரம் : இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் குறித்து போலீஸ் எஸ்பி சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகளான மாநகர பிரதான சாலை மற்றும் மாவட்டத்தின் பல முக்கிய சந்திப்புகள் உட்பட மொத்தம் 36க்கும் மேற்பட்ட இடங்களில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபடுத்தப்படுவார்கள். மேலும், மாவட்டத்தில் சுமார் 160க்கும் மேற்பட்ட மிக முக்கிய இடங்கள், கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகள் போன்றவற்றிற்கு ரோந்து காவலர்கள் நியமித்து தீவிர ரோந்து பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
மேலும், காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர் தலைமையில் 3 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 4 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 15க்கும் மேற்பட்ட காவல்துறை ஆய்வாளர்கள் ஆகியோர் தொடர் ரோந்து அலுவலில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்ட பாதுகாப்பு பணிக்கு காவலர்கள் மற்றும் ஊர்காவல் படையினர் ஆகியோர் சேர்ந்து மொத்தம் 800 காவல் அதிகாரிகள், போலீசார் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
மேலும், தங்கள் பகுதிகளில் செயல்படும் பொழுதுபோக்கு தலங்கள் மற்றும் விடுதிகள் விதிமுறைகளை மீறினாலும், மதுபோதையில் வாகனத்தை இயக்குதல் மற்றும் வாகன சாகசங்களில் ஈடுபடுதல் போன்ற இளைஞர்களின் பொறுப்பற்ற நடவடிக்கைகள் குறித்தும் பொதுமக்கள், காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின்ன் நேரடி கண்காணிப்பில் இயங்கும் ஹெல்ப்லைன் 9498100260-க்கு எவ்வித தயக்கமுமின்றி தகவல் தெரிவிக்கலாம். மேலும் காவல் கட்டுப்பாட்டு அறை 044 – 27236111 – 044 – 27238001 – 94981 00260 ஆகிய எண்களை தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
* புகார் எண்கள் அறிவிப்பு
தங்கள் பகுதிகளில் செயல்படும் விடுதிகள் மேற்கூறிய விதிமுறைகளை மீறினால் அதுகுறித்தும், மதுபோதையில் வாகனத்தை செலுத்துதல் மற்றும் சாகசங்களில் ஈடுபடுதல் போன்ற இளைஞர்களின் பொறுப்பற்ற நடவடிக்கைகள் குறித்தும் பொதுமக்கள், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் ஹெல்ப்லைன் எண் 7200102104-க்கு எவ்வித தயக்கமுமின்றி தொலைபேசி அல்லது வாட்ஸ்ஆப் வாயிலாக தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தகவல் தெரிவிப்பவர்களின் விவரம் ரகசியமாக பாதுகாக்கப்படும். பொதுமக்கள் தொடர்புக்கு, காவல் கட்டுபாட்டு அறை : 044 -29540888, தனிப்பிரிவு அலுவலகம் : 044-29540555/777, வணக்கம் காவல்துறை : 7200102104 என்ற எண்களை அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post நாளை புத்தாண்டு கொண்டாடப்படுவதை முன்னிட்டு இசிஆர், ஓஎம்ஆர், ஜிஎஸ்டி சாலைகளில் நட்சத்திர ஓட்டல்களுக்கு கட்டுப்பாடுகள் appeared first on Dinakaran.