சென்னை: அதானி நிறுவனம் அதிக தொகை கோரியதால் ஸ்மார்ட் மின் மீட்டர்கள் கொள்முதலுக்கான டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் தற்போது வீடு, வணிகம், விவசாயம், கைத்தறி, குடிசை இணைப்பு என 3 கோடிக்கும் அதிகமான மின் நுகர்வோர்கள் உள்ளனர். இந்த இணைப்புகளுக்கு தற்போது டிஜிட்டல் மின் மீட்டர்கள் மூலம் மின்சார பயன்பாடு கணக்கிடப்படுகிறது. வீடுகளில் மின்சார பயன்பாட்டை கணக்கிட ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்த ஒன்றிய அரசு அறிவுறுத்தியது.
மின்சாரத்தினை சரியான முறையில் கணக்கிடவும், வீட்டுக்கு வந்து கணக்கெடுக்காமல் அலுவலகத்தில் இருந்தபடியே துல்லியமாக கணக்கீடு செய்ய ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்த திட்டமிடப்பட்டது. இதற்காக புதுப்பிக்கப்பட்ட விநியோக திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசின் நிதி உதவியுடன் ரூ.19,000 கோடியில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின் படி வீடு மற்றும் வணிக(விவசாய மற்றும் குடிசை இணைப்பை தவிர) பிரிவில் உள்ள தாழ்வழுத்த மற்றும் உயரழுத்த இணைப்புகளில் 3 கோடியே 14 ஆயிரத்து 117 இணைப்புகளுக்கு தற்போது உள்ள டிஜிட்டல் மீட்டர்களுக்கு பதிலாக ஸ்மார்ட் மீட்டர் பொருத்த திட்டமிடப்பட்டது.
இதையடுத்து கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதத்தில் டெண்டர் கோரியது. பின்னர் டெண்டர் நடைமுறைகளில் நிறுவனங்களுக்கு பல சந்தேகங்கள் இருந்ததால் டெண்டர் ரத்து செய்யப்பட்டு, 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் டெண்டர் விடப்பட்டது. இந்த டெண்டரின் படி ஆர்டரை பெறும் நிறுவனமே மீட்டர்களை பொருத்தி, அதனை பராமரிக்க வேண்டும். இதற்கான கட்டணத்தை மின் வாரியம் மாதம் மாதம் செலுத்தும் அடிப்படையில் டெண்டர் விடப்பட்டது.
4 பகுதிகளாக இந்த டெண்டர் விடப்பட்ட நிலையில் முதல் பகுதியில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட 8 மாவட்டங்களுக்கு மட்டும் 82 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்க டெண்டர் விடப்பட்டது. அதானி உள்பட 4 நிறுவனங்கள் இந்த டெண்டரில் பங்கேற்று இருந்தது. அதானி நிறுவனம் தான் 4 நிறுவனங்களில் மிக குறைவான தொகையை கோரியிருந்தது. இந்த நிலையில், தமிழக அரசு நிர்ணயித்து இருந்த தொகையை விட அதானி நிறுவனத்தின் தொகை அதிகமாக இருந்ததால், அந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டென்டர் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் இருந்து மட்டுமே தகவல் வெளியாகியுள்ளது. தமிழக மின்வாரியம் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை. அடுத்த சில தினங்களில் டெண்டர் ரத்து செய்யப்பட்டதற்கான அறிவிப்பை வெளியிட்டு ஸ்மார்ட் மின் மீட்டர் கொள்முதலுக்கான டெண்டரானது மீண்டும் விடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2025ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த திட்டம் தாமதமாக செயல்படுத்தப்படும் பட்சத்தில் இந்த திட்டத்திற்கு ஒன்றிய அரசு தரப்பில் வழங்க வேண்டிய மாணியம் கிடைக்காமல் போகவும், அதனை கடனாகவே ஒன்றிய அரசு வழங்க வாய்ப்புள்ளதாகவும் மின் வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
The post அதிக தொகை கோரிய அதானி நிறுவனம்; ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கான டெண்டர் ரத்து: மின் வாரிய அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.