×

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு; தீவிர இயற்கை பேரிடராக அறிவிப்பு: அமித் ஷாவுக்கு பிரியங்கா காந்தி நன்றி

புதுடெல்லி: இந்தாண்டு ஜூலை 30ம் தேதி கேரள மாநிலம் வயநாட்டில் 3 கிராமங்களில் நேர்ந்த நிலச்சரிவில் 200க்கு மேற்பட்டோர் இறந்தனர். பலர் காயமடைந்த நிலையில் ஆயிரக்கணக்கானோர் வீடிழந்தனர். கேரளா சந்தித்த மிக மோசமான இயற்கை பேரிடர்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு மக்களுக்கு இழப்பீடு வழங்க போதிய நிதியை ஒன்றிய அரசு ஒதுக்கவில்லை என, அத்தொகுதியின் காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி குற்றம்சாட்டினார். அதேபோல் அந்த தொகுதியின் முன்னாள் எம்பி ராகுல் காந்தியும் ஒன்றிய அரசை விமர்சித்தார்.

இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட வயநாட்டுக்கு போதிய நிதியை வழங்க வேண்டும் என்று பிரியங்கா காந்தி தலைமையிலான கேரள எம்பிக்கள் குழு, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து வலியுறுத்தியது. இந்நிலையில் கேரள அரசிற்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் கொடுத்த தகவலில், ‘வயநாடு பேரிடர் தீவிர இயற்கை பேரிடராக அறிவிக்கப்பட்டதால் அதற்கேற்ற இழப்பீடுகள் வழங்கப்படும். ஒன்றிய குழு அறிக்கைப்படி இந்த நிதியுதவி இருக்கும்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வயநாடு எம்பி பிரியங்கா காந்தி வெளியிட்ட பதிவில், ‘வயநாடு பேரிடரை தீவிர இயற்கை பேரிடராக அறிவிக்கும் முடிவை வெளியிட்ட அமித் ஷாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அறிவிப்பானது பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வுக்கு உதவும் என்று நம்புகிறேன். அதற்கு போதுமான நிதியை விரைவில் ஒதுக்கினால் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்போம்’ என்று கூறியுள்ளார்.

The post வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு; தீவிர இயற்கை பேரிடராக அறிவிப்பு: அமித் ஷாவுக்கு பிரியங்கா காந்தி நன்றி appeared first on Dinakaran.

Tags : Priyanka Gandhi ,Amit Shah ,New Delhi ,Wayanad, Kerala ,Kerala ,Wayanad ,
× RELATED அம்பேத்கர் குறித்த கருத்து; அமித் ஷா...