நவிமும்பை: மும்பையில் மது குடித்துவிட்டு புத்தாண்டு கொண்டிய போது ஓரின சேர்க்கையால் ஆவேசமடைந்த 2 இளைஞர்கள் வயதான மூதாட்டி மற்றும் அவரது மகனை கழுத்தை நெரித்துக் கொன்றனர். மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையின் காமோத்தே செக்டரில் கீதா பூஷண் (70) என்பவரும், அவரது மகன் ஜிதேந்திர (45) என்பவரும் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் புத்தாண்டுக்கு பின்னர் அவர்களின் வீடு பூட்டியே இருந்ததால், அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்தனர். இதுகுறித்து உள்ளூர் போலீசுக்கு மக்கள் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, கேபிள் வயர் உதவியுடன் ஜிதேந்திரா கழுத்தை நெரித்து கொல்லப்பட்டும், அவரது தனது தாய் கீதா பூஷணும் கொல்லப்பட்டது தெரியவந்தது.
இருவரின் சடலங்களையும் கைப்பற்றிய போலீசார், கொலையாளிகளை தேடி வந்தனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘சம்பவ இடத்தில் இருந்த தடயங்களின்படி பார்த்தால் இருவர் சேர்ந்து, தாயையும் மகனையும் கொன்றிருக்க வாய்ப்பு இருந்தது. அதையடுத்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தோம். அந்த வகையில் குற்றவாளிகளான 19 வயதான சுபம் நாராயணி மற்றும் 19 வயதான சஞ்ச்யோத் மங்கேஷ் ஆகியோர் அடையாளம் காணப்பட்டனர். இவர்கள் இருவரிடமும் விசாரணை நடத்தியதில், புத்தாண்டு தினத்திற்கு முதல் நாள் இரவு (டிச. 31) வீட்டில் இருந்த ஜிதேந்திரா, கைதான இரு இளைஞர்களையும் தனது வீட்டிற்கு புத்தாண்டு கொண்டாட அழைப்பு விடுத்திருந்தார். ஏற்கனவே பழக்கம் இருந்ததால் இரு இளைஞர்களும் ஜிதேந்திரா வீட்டிற்கு வந்தனர்.
மூவரும் மது அருந்தினர். பின்னர் அந்த இளைஞர்களிடம் ஓரின சேர்க்கையில் ஈடுபட ஜிதேந்திரா முயன்றுள்ளார். அதனால் ஆவேசப்பட்ட இளைஞர்கள், ஜிதேந்திராவை கேபிள் ஒயரால் கழுத்தை நெரித்துக் கொன்றனர். பின்னர் அவரது தாயையும் கொன்றனர். வீட்டில் இருந்த பணம், நகைகள் மற்றும் மொபைல் போன்களை எடுத்துச் சென்றனர். தற்போது இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில், தொடர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்’ என்று கூறினர்.
The post மது குடித்துவிட்டு புத்தாண்டு கொண்டாடிய போது தாய், மகன் கழுத்தை நெரித்து கொலை: ஓரின சேர்க்கையால் 2 இளைஞர்கள் ஆவேசம் appeared first on Dinakaran.