ஜெய்சால்மர்: பாலைவன மாநிலத்தில் போர்வேல் போட்ட போது பூமியில் இருந்து பீறிட்டு வெளியேறிய நிலத்தடி நீர் குறித்து ஒன்றிய, மாநில நிபுணர்கள் குழு திகைப்புடன் ஆய்வு செய்தனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் மாவட்டம் மோகன்கர் பகுதியில், கடந்த 3 நாட்களுக்கு முன் போர்வெல் கிணறு தோண்டப்பட்டது. அப்போது நிலத்தடியில் இருந்து வெள்ளம் போல் தண்ணீர் வெளியேறத் தொடங்கியது. கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு நீர் வெளியேறியது. போர்வெல் இயந்திரமே சரிந்தது. யாரும் அப்பகுதியில் நிற்க முடியாத அளவிற்கு தண்ணீர் வெளியேறியது.
வயல்களில் தண்ணீர் நதி போல ஓடிக் கொண்டிருந்தது. நிலத்தடியில் இருந்து இயற்கையாக வெளியேறிய நீர் ஓட்டம் நேற்று தான் நின்றது. கடந்த 3 நாட்களாக தண்ணீர் கட்டுப்பாடின்றி வெளியேறியதால் மாவட்ட நிர்வாகமும் திக்குமுக்காடியது. பாலைவன மாநிலத்தில் இவ்வளவு தண்ணீர் எப்படி வெளியேறி வருகிறது? என்று பலரும் ஆச்சரியமாக பார்த்தனர். நிலத்தடி நீர் வல்லுநர்களும், அப்பகுதியில் முகாமிட்டு ஆய்வு செய்தனர். அந்த வகையில் ஒன்றிய அரசின் நிலத்தடி நீர் வாரியம், ஐ.ஐ.டி ஜோத்பூர், மாநில நிலத்தடி நீர் வாரியம் தொடர்பான ஆய்வாளர்கள் மற்றும் மூத்த நிலத்தடி நீர் விஞ்ஞானி டாக்டர் நாராயண் இங்கியா உள்ளிட்ட நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை ஆய்வு செய்தனர். இதுகுறித்து நிலத்தடி நீர் நிபுணர்கள் கூறுகையில், ‘நிலத்தடி தண்ணீருடன் வெளியேறிய மணலானது, மூன்றாம் நிலைக் காலத்துடன் தொடர்புடையது. நிலத்தடியில் இருந்து வெளியேறிய நீரானது, 60 மில்லியன் ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம். தற்போது வெளியாகி உள்ள நிலத்தடி நீர், மீண்டும் எப்போது வேண்டுமானாலும் வெளியேறலாம். நச்சு வாயு போன்ற தீங்கு விளைவிக்கும் வாயுகளும் கூட வெளியேறலாம்’ என்று கூறினர்.
அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீர் வெளியேற்றம், நிலத்தடி நீர் நிபுணர்கள் குழு அளித்த ஆய்வறிக்கையின் அடிப்படையில், இப்பகுதியில் இந்திய சிவில் பாதுகாப்புச் சட்டத்தின் 163வது பிரிவின் கீழ் பயன்படுத்தக் கூடாத பகுதியாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post பாலைவன மாநிலத்தில் போர்வெல் போட்ட போது பூமியில் இருந்து பீறிட்டு வெளியேறிய நிலத்தடி நீர்: ஒன்றிய, மாநில நிபுணர்கள் குழு திகைப்பு appeared first on Dinakaran.