காலாப்பட்டு : கீழ்புத்துப்பட்டு அருகே 2 வீடுகள் மீது ெபட்ேரால் குண்டு வீசிய வழக்கில் ஏசி மெக்கானிக் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் கீழ் புத்துப்பட்டு ஊராட்சியை சேர்ந்த நம்பிக்கை நல்லூர் மீனவ கிராம பகுதியை சேர்ந்தவர் புகழேந்தி (48).
மீனவரான இவர் தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் சுரேந்தர் என்பவரது வீட்டில் அவர் இல்லாத நேரம் பார்த்து கடந்த நவம்பர் மாதம் 24ம் தேதி அத்துமீறி உள்ளே நுழைந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சுரேந்தர் மனைவி திவினா (27) கோட்டகுப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் கோட்டக்குப்பம் போலீசார் விசாரணை செய்தபோது புகழேந்தி மன்னிப்பு கோரியதை அடுத்து இரு தரப்பினரும் சமாதானமாக சென்றனர்.
இந்நிலையில் புகழேந்தியின் மூன்றாவது மகன் மதன் (21). இவர் ஏசி மெக்கானிக் வேலை செய்து வருகிறார். அவர், கடந்த 19ம் தேதி தனது நண்பர்களுடன் சேர்ந்து 2 பீர் பாட்டிலில் பெட்ரோல் குண்டு தயாரித்து சுரேந்தர் மற்றும் அருகில் உள்ள அவரது தம்பி சுமன் ஆகியோரது வீட்டின் மீது வீசிவிட்டு தப்பிச்சென்றுள்ளார். இதில் சுரேந்தர் மற்றும் சுமன் வீட்டின் வாசற்கால் தீப்பற்றி எரிந்தது, வீட்டில் இருந்த பொருட்கள் சேதமாகின.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் தலைமையிலான போலீசார் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடங்களை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
இதில் புகழேந்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் பெட்ரோல் குண்டு வீசிய புகழேந்தியின் மூன்றாவது மகன் மதன் மற்றும் அவரது நண்பர்களான அதே ஊரை சேர்ந்த டேனியல் பாரதி, கூனிமேட்டை சேர்ந்த முகுந்தன் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.
இந்நிலையில் அவர்கள் மூவரும் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தலைமறைவாகி இருந்த நிலையில் நேற்று அவர்கள் மூவரும் கீழ்புத்துப்பட்டு அய்யனாரப்பன் கோயில் பின்புறம் உள்ள குளத்துக்கு அருகே உள்ள கருமாதி கொட்டகைக்கு மேல் பதுங்கி இருப்பதாக கோட்டகுப்பம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு போலீசார் சென்றதும், பதுங்கி இருந்த மதன் மற்றும் அவரது நண்பர்களான டேனியல் பாரதி, முகுந்தன் ஆகியோர் கருமாதி கொட்டகையில் இருந்து குதித்து தப்பியோட முயன்றனர்.
அப்போது மதன், டேனியல் பாரதி ஆகியோருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனார். பின்னர் 3 பேரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவர்கள் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post கீழ்புத்துப்பட்டு அருகே 2 வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் ஏசி மெக்கானிக் உள்பட 3 பேர் கைது appeared first on Dinakaran.