×

களக்காடு அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து யானைகள் மீண்டும் அட்டகாசம்

*விவசாயிகளுக்கு ரூ.பல லட்சம் இழப்பு

களக்காடு : களக்காடு அருகே காட்டு யானைகள் கூட்டம், மீண்டும் விளைநிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்ததில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வாழைகள், சொட்டு நீர் பாசன குழாய்கள் சேதமடைந்தது.

இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.நெல்லை மாவட்டம், களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மலையடிவார கிராமங்களில் குளிர் காலங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் காணப்படுவது வழக்கம்.

அதன்படி கடந்த சில நாட்களாக களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம், மேலவடகரை, சிவபுரம் உள்ளிட்ட மலையடிவார பகுதிகளில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. கடந்த 28ம் தேதி அதிகாலையில் மேலவடகரையில் காட்டு யானைகள் ரூ.5லட்சம் மதிப்புள்ள வாழைகளை நாசம் செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்று அதிகாலையில் தலையணை மலையடிவாரத்தில் உள்ள சிவபுரம், கள்ளியாறு, சாஸ்தா கோயில் பகுதிகளில் காட்டு யானைகள் கூட்டம் புகுந்தது. விளைநிலங்களுக்குள் யானைகள் கூட்டம் நிற்பதை பார்த்து காவலுக்கு இருந்த விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக சுதாரித்துக்கொண்டு அவர்கள் சத்தம் எழுப்பி யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் முயற்சி வீணானது.

யானைகள் அங்கிருந்து செல்லாமல், விளைநிலங்களில் பயிர் செய்யப்பட்டிருந்த வாழை மரங்கள் சாய்ந்தன. நீண்ட நேரத்திற்கு பின் யானைகள் விளைநிலங்களை விட்டு வெளியேறின. யானைகள் அட்டகாசத்தால் 6 மாதமான ஏத்தன், ரசகதலி, தொழுவன் வகைகளை சேர்ந்த 1,300க்கும் மேற்பட்ட வாழைகள் நாசமானது.

மேலும் வாழைகளுக்கு தண்ணீர் பாய்ச்ச போடப்பட்டிருந்த ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள சொட்டு நீர் பாசன குழாய்களையும் யானைகள் உடைத்து சேதப்படுத்தியுள்ளன. யானைகள் நாசம் செய்த வாழைகள் மற்றும் சொட்டு நீர் பாசன குழாய்கள் களக்காடு புதுத்தெருவை சேர்ந்த சுரேஷ், கக்கன்நகரை சேர்ந்த நம்பி அருள், மூங்கிலடியை சேர்ந்த வளனரசு ஆகியோர்களுக்கு சொந்தமானது ஆகும். குலைதள்ளி, மகசூலுக்கு தயாராகி வந்த வாழைகளை, யானைகள் துவம்சம் செய்தது விவசாயிகளிடையே கவலையை கொடுத்துள்ளது.

இதுகுறித்து களக்காடு வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. களக்காடு வனசரகர் பிரபாகரன் மற்றும் வனத்துறையினர் யானைகள் நாசம் செய்த வாழைகள், குழாய்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் வனசரகர் பிரபாகரன் கூறுகையில், ‘யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவும் ஏற்பாடு செய்யப்படும்” என்றார்.

The post களக்காடு அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து யானைகள் மீண்டும் அட்டகாசம் appeared first on Dinakaran.

Tags : Kalakkadu ,
× RELATED களக்காடு தலையணையில் குடும்பத்துடன் குவிந்த சுற்றுலா பயணிகள்