×

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பகல்பத்து உற்சவம் தொடங்கியது: 10ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு

ஸ்ரீரங்கம்.: பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும். மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவம் மிக்கது. பகல்பத்து. ராபத்து இயற்பா என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் (30-ந்தேதி) தொடங்கியது. பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான திருமொழி திருநாள் நேற்று துவங்கியது. இதையொட்டி நம்பெருமாள் காலை 7.45 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு காலை 8.30 மணிக்கு அர்சுன மண்டபம் வந்தடைந்தார்.

காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணிவரை அரையர்கள் நம்பெருமாள் முன் நின்று நாலாயிரம் திவ்யப்பிரபந்த பாடல்களை அபிநயம் மற்றும் இசையுடன் பாடினர். இரவு 7.30 மணிக்கு அர்சுன மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். பகல் பத்தின் முதல் நாளான மூலவர் ரெங்கநாதர் முத்தங்கி சேவையில் காட்சியளித்தார். இந்த முத்தங்கி சேவை தொடர்ந்து 20 நாட்களுக்கு நடைபெறும். இதே போல் பகல் பத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் அர்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

பகல்பத்து உற்சவத்தின் 10-வது நாள் (9-ந்தேதி) நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். 10-ந்தேதி ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். அன்றைய தினம் அதிகாலை 4.15 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 5.15 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசலில் எழுந்தருள்வார். இதையொட்டி நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் லட்சகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளுடன் பரமபதவாசலை கடந்து செல்வார்கள். சொர்க்கவாசல் 11-ந்தேதி முதல் 15-ந் தேதி வரை பகல் 1 மணி முதல் இரவு 8 மணிவரை திறந்திருக்கும். 16-ந்தேதி மாலை 4 மணிமுதல் இரவு 9 மணிவரை திறந்திருக்கும். 17-ந்தேதி சொர்க்கவாசல் திறப்பு இல்லை. சொர்க்கவாசல் திறப்பு தினமான 10-ந்தேதி முதல் ராப்பந்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் தொடங்குகிறது. ராப்பத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் ஆயிரங்கால் மண்டபத்தின் நடுவே உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். ராப்பத்து ஏழாம் திருநாளான 16-ந்தேதி நம்பெருமாள் திருக்கைத்தல சேவையும், எட்டாம் திருநாளான 17-ந்தேதி திருமங்கைமன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், பத்தாம் திருநாளான 19-ந்தேதி தீர்த்தவாரியும், 20-ந்தேதி நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியும் நடைபெறும். இத்துடன் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவு பெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரியப்பன், கோவில் உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன், கண்காணிப்பாளர் வெங்கடேசன், மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தினமும் நடைபெறும் வைபவங்களில் 10 விதமான வாத்திய கருவிகள் வாசிக்கப்படும். வைகுண்ட ஏகாதசி விழா காலங்களில் மட்டும் 18 விதமான வாத்திய கருவிகள் வாசிக்கப்படும். இதில் பெரியமேளம், நாதஸ்வரம், டக்கை. சங்கு, மிருதங்கம், வெள்ளியெத்தாளம், செம்புயெத்தாளம், வீரவண்டி உள்பட 18 வாத்திய கருவிகள் வாசிக்கப்படும். சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள் பாண்டியன் கொண்டை, ரத்தின பாதுகாப்பு, வைரஅபயஹஸ்தம், பவளமாலை, காசுமாலை, முத்துச்சரம், அடுக்கு பதக்கம் உள்ளிட்ட திருஆபரணங்கள் அணிந்து அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

The post ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பகல்பத்து உற்சவம் தொடங்கியது: 10ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Pagalpattu Utsavam ,Srirangam Renganathar Temple ,Srirangam ,Vaikuntam ,Vaikunta Ekadashi festival ,Thiruadhyayana Utsavam ,Margazhi ,Pagalpattu ,Raapattu Iyarpa… ,
× RELATED நாளை மறுநாள் திருநெடுந்தாண்டகத்துடன்...