×

மாவட்டத்தின் கடைக்கோடியில் அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் 38 மலை கிராம மக்கள்

*அரசின் திட்டங்கள் எட்டாக்கனியாக உள்ளது

கிருஷ்ணகிரி : அஞ்செட்டி தாலுகா, நாட்றாம்பாளையம் ஊராட்சியில் உள்ள 38 மலை கிராம மக்கள், குடிநீர், சாலை, மின்சாரம், வீடு போன்ற எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி தவித்து வருகின்றனர். மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு செய்து, பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி தாலுகா நாட்றாம்பாளையம் ஊராட்சி, மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ளது. மாவட்ட தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 125 கி.மீ., தொலைவில் பல்வேறு மலைகளை கடந்து அமைந்துள்ள இந்த ஊராட்சியில் அட்டப்பள்ளம், பூந்தோட்டப்பள்ளம், பத்திகவுண்டனூர், ஏத்தகிணறு, அத்திமரத்தூர், கோம்பைக்காடு, சேசுராஜபுரம், மோட்ராகி உள்ளிட்ட 38 சிற்றூர்கள் உள்ளது.

இந்த கிராமங்கள் பெரும்பாலும் வனப்பகுதியையொட்டி உள்ளதால், அரசு சலுகைகள் குறித்து இப்பகுதி மக்கள் போதிய விழிப்புணர்வு இல்லாததால், அரசு நலத்திட்டங்கள் என்பது எட்டாக்கனியாக உள்ளது. குறிப்பாக இப்பகுதி மக்கள் பழமையான குடிசை வீடுகளிலும், சாலை, மின்சாரம் மற்றும் குடிநீர் உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகள் இன்றியும் வசிக்கின்றனர்.

இங்கு வசிக்கும் மக்கள், அடிப்படை தேவைகளுக்காக கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் என்றால், அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை வழியாக சுமார் 120 கிலோ மீட்டர் கடந்து செல்ல வேண்டும்.

அல்லது ஒகேனக்கல், பென்னாகரம் வழியாக சென்றால், 130 கிலோ மீட்டர் செல்லும் நிலை உள்ளதால், இப்பகுதி மக்கள் புகார் அளிக்க செல்லாமல், இருப்பதை வைத்து வாழ்ந்து வருகின்றனர். ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் வழங்கும் வீடு மற்றும் சாலை அமைக்கும் திட்டங்கள் மூலம், இப்பகுதி கிராம மக்களின் அடிப்படை பிரச்னைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி சமூக ஆர்வலர் ஆனந்த் என்பவர் கூறியதாவது: கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி இரு மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ள நாட்றாம்பாளையம் ஊராட்சியில் உள்ள கிராமங்களுக்கு, அரசு அதிகாரிகள் நேரில் வந்து குறைகளை கேட்டு தீர்ப்பதில்லை. இதனால், இங்கு வசிக்கும் மக்கள் அரசின் திட்டங்கள் மற்றும் சலுகைகள் குறித்து தெரியாமல் உள்ளனர். மேலும், இப்பகுதியில் பல தலைமுறைகளாக, ஒரே குடிசை வீட்டில் பலர் வசிக்கின்றனர்.

சாலைகளும் பழுதடைந்து பல ஆண்டுகளாக சீரமைக்காமல் உள்ளதால், அத்தியாவசிய தேவைகளுக்கு வாகனங்களில் செல்ல முடியாத நிலை உள்ளது. தமிழக அரசின் வீடு கட்டும் திட்டத்தில், வீடுகள் இல்லாதவர்களுக்கு வீடுகள் வழங்காமல், வீடு உள்ளவர்களுக்கே வீடுகள் வழங்கி உள்ளனர். சில பகுதிகளில் இலவச வீடுகள் கட்டி கொடுப்பதாக, பயனாளிகளை வைத்து புகைப்படம் எடுத்து சென்றுள்ளனர்.

ஆனால் வீடுகள் கட்டி கொடுக்கவில்லை, பலர் இலவச வீடுகள் கேட்டு, கடந்த 10 ஆண்டுகளாக அதிகாரிகளிடம் மனு அளித்தும், இதுவரை வீடு வழங்கவில்லை. ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் திட்டங்களில், சாலை மற்றும் வீடுகள் வழங்க ஒதுக்கப்படும் பல கோடி நிதி, இந்த கிராமங்களுக்கு வருவதில்லை.

எனவே, இந்த கிராமங்களில் கலெக்டர் நேரில் வந்து ஆய்வு செய்து வீடு, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்
தெரிவித்தார்.

The post மாவட்டத்தின் கடைக்கோடியில் அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் 38 மலை கிராம மக்கள் appeared first on Dinakaran.

Tags : KRISHNAGIRI ,ANJETI TALUKA ,NATRAMPALAYAM URADCHI ,Dinakaran ,
× RELATED கிருஷ்ணகிரி நகரில் புத்தாண்டையொட்டி...