சின்னசேலம், டிச. 31: சின்னசேலம் அருகே இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேக நபர்களிடம் மாவட்ட எஸ்.பி. 6 மணி நேரம் நேரில் விசாரணை நடத்தினார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே திம்மாபுரம் வடக்கு காட்டு கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் செந்தில் (32). இவரது மனைவி நிர்மலா (26). இவர்களுக்கு கனிஷ்கா (6), ஹரிணி (4) என்ற இரு மகள்கள் உள்ளனர். மேலும் செந்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திராவில் நெல் அறுவடை இயந்திரத்தில் வேலை செய்யும் போது மின்சாரம் தாக்கி இறந்து விட்டார். அதனால் நிர்மலா தனது வீட்டில் மகள்களுடன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு மாலை 7 மணியளவில் நிர்மலா தனது குழந்தைகளை வீட்டில் விட்டு, பால்சொசைட்டிக்கு பால் ஊற்ற சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் நிர்மலா வீடு திரும்பவில்லை.
இதையடுத்து மறுநாள் காலை நிர்மலாவின் உறவினர்கள் தேடியபோது அருகில் உள்ள சோளக்காட்டில் அரை நிர்வாணமாக நிர்மலா இறந்து கிடந்தார். இதையடுத்து டிஎஸ்பி தேவராஜ் தலைமையில் சின்னசேலம் இன்ஸ்பெக்டர் ஏழுமலை, சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தீவிர விசாரணை நடத்தினர். இந்நிலையில் இறந்துபோன நிர்மலாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று முன்தினம் மாலை சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சி டிஎஸ்பி தேவராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஏழுமலை, சப்-இன்ஸ்பெக்டர்கள் மாணிக்கம், ஆனந்தராஜ் மற்றும் கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் சப்-டிவிஷன் போலீசார் சேர்ந்த 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சந்தேக நபர்கள் என 17 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்திய நிலையில் அதில் 10 பேரை அனுப்பி விட்டனர். இந்நிலையில் மீதியுள்ள சந்தேக நபர்கள் 7 பேரிடமும் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜித் சதுர்வேதி சின்னசேலம் காவல் நிலையத்தில் வந்து தனித்தனியாக சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தினார். அப்போது கள்ளக்குறிச்சி டிஎஸ்பி தேவராஜ் உள்ளிட்டோரும் உடனிருந்தனர். மேலும் இதுகுறித்து சின்னசேலம் போலீசாரிடம் கேட்டபோது இன்னும் ஓரிரு நாளில் குற்றவாளியை கண்டுபிடித்து விடுவோம் என்று கூறினர்.
The post சந்தேக நபர்களிடம் எஸ்.பி. நேரில் விசாரணை appeared first on Dinakaran.