×

மற்றவரின் டூவீலரை ஓட்டுபவருக்கும் தனிநபர் விபத்து காப்பீடு ெபாருந்தும்: இழப்பீட்டை வட்டியுடன் வழங்க உத்தரவு

மதுரை: மற்றவரின் டூவீலரை ஓட்டுபவருக்கும் தனிநபர் விபத்து காப்பீடு பொருந்தும் என்பதால், இழப்பீட்டை வட்டியுடன் வழங்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டையைச் சேர்ந்த அண்ணாமலை, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்,
‘‘எனது டூவீலருக்கு தனிநபர் விபத்து காப்பீடு செய்யப்பட்டது. 2021ல் எனது மகன், என்னுடைய டூவீலரை ஓட்டிச் சென்றபோது பள்ளத்தில் விழுந்து படுகாயமடைந்து இறந்தார். விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். டூவீலரை ஓட்டுபவர் இறந்தால் தனிநபர் விபத்துக் காப்பீடு திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை இழப்பீடு பெறலாம். இதனால் என் மகன் இறப்பிற்கு ரூ.15 லட்சம் இழப்பீடு கோரிய மனுவிற்கு நான் செய்த காப்பீடு எனது மகனுக்கு பொருந்தாது என கூறினர். எனவே, உரிய இழப்பீடு வழங்குமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், ‘‘மனுதாரரின் மகன் காப்பீடு செய்யப்பட்ட வாகனத்தின் உரிமையாளர் அல்ல எனக்கூறி இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீடு நிராகரித்துள்ளது. தனிநபர் விபத்து காப்பீட்டின்படி உரிமையாளர் மற்றும் டிரைவர் இழப்பீடு தொகை பெற உரிமையுடையவர் என ஏற்கனவே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இறந்தவர் வாகன உரிமையாளரின் மகன் என்பதால் தனிநபர் விபத்து காப்பீடு திட்டத்தில் இழப்பீடு பெற உரிமை உள்ளது. வாகன உரிமையாளரிடமிருந்தோ அல்லது அனுமதிக்கப்பட்ட பிற நபர்களிடமிருந்தோ வாகனத்தை பெற்று ஓட்டுபவருக்கும் தனிநபர் விபத்து காப்பீடு பொருந்தும். எனவே ரூ.15 லட்சத்தை 6 சதவீத வட்டியுடன் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும்’’ என உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தார்.

The post மற்றவரின் டூவீலரை ஓட்டுபவருக்கும் தனிநபர் விபத்து காப்பீடு ெபாருந்தும்: இழப்பீட்டை வட்டியுடன் வழங்க உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Madurai ,High Court ,Annamalai ,Pudukkottai ,Dinakaran ,
× RELATED ஒரே கோரிக்கையுடன் மீண்டும் வழக்கு...