காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க லஞ்சம் கேட்ட செயற்பொறியாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து காஞ்சிபுரம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. காஞ்சிபுரம், அசோக் நகர், இந்திரா அவென்யூவைச் சேர்ந்தவர் பரணிதரன். இவர் கடந்த 2010ம் ஆண்டு தன்னுடைய வீட்டுக்கு மின் இணைப்பு கேட்டு காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.
அம்மனு சம்பந்தமாக அவ்வலுவகத்தில் பணிபுரிந்த செயற்பொறியாளர் பஞ்சாட்சரம் (70) என்பவரை கடந்த 15.11.2010 அன்று சந்தித்து கேட்டபோது மனு மீது நடவடிக்கை மேற்கொள்ள, ரூ.10 ஆயிரம் தனக்கு லஞ்சமாக தர வேண்டும் என கேட்டுள்ளார். லஞ்சம் தர விருப்பம் இல்லாததால் பரணிதரன் காஞ்சிபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் அளித்த புகாரின் பேரில் கடந்த 19.11.2010 அன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது பஞ்சாட்சரம் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் புலனாய்வு முடிக்கப்பட்டு குற்ற இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு விசாரணை காஞ்சிபுரம் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் மற்றும் தனி நீதிபதி வசந்தகுமார் முன்பாக நடந்து வந்தது. வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் நேற்று பஞ்சாட்சரம் குற்றவாளி எனக் கூறி ஊழல் தடுப்பு சட்டம் பிரிவு 7ன்கீழ் 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் மற்றும் பிரிவு 13 (2)ன் கீழ் ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.20 ஆயிரம் அபராதம், மூன்று ஆண்டு தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்தார்.
The post மின் இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய வழக்கில் செயற்பொறியாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை: காஞ்சிபுரம் நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.