* விபரீதத்தில் கொண்டு போய் விடும் என போலீசார் எச்சரிக்கை
பெரம்பூர்: செல்போன் என்பது முதன்முதலில் கண்டுபிடித்தபோது அது மனிதர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருந்தது. எந்த நேரம் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம், மேலும் வேலை செய்யும் இடங்களில் அது நிறுவனங்களுக்கும், ஊழியர்களுக்கும் ஒரு பலமாக அமைந்தது. இதனால் அடித்தட்டு மக்கள் வரை அனைவரும் செல்போன்களை வாங்கி பயன்படுத்த தொடங்கினர்.
அதன் பிறகு அதில் பல்வேறு பரிணாம வளர்ச்சி அடைந்து ஒரு கம்ப்யூட்டர் செய்ய வேண்டிய அனைத்து விஷயங்களையும் தற்போது நமது கையில் உள்ள செல்போன் மூலம் செய்து விடலாம் என்ற நிலை தற்போது வந்துள்ளது. செல்போன்களில் பேசிவிட்டு இருந்த காலம் மாறி சமூக வலைதளங்கள் செல்போன்களில் வர ஆரம்பித்த பிறகு மனிதர்களுடைய தொடர்பு என்பது அபரிமிதமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது.
முன்பின் தெரியாதவர்கள் கூட லைக், ஷேர் செய்து நம்மை பின் தொடர்கிறார்கள். அதன் பின்பு நமக்கே ஒரு ஆவல் வந்து யார் நம்மை பின் தொடர்கிறார்கள் என அவர்களிடம் விசாரிக்கும்போது முன்பின் தெரியாதவர்கள் பழக்கமாகிறார்கள். அதன் மூலம் நட்பு வட்டாரம் அதிகரிக்கிறது. இதில் பெரும்பாலும் பெண்கள் ஆண்களுடனும், ஆண்கள் பெண்களுடன பேசவே அதிகம் விரும்புகிறார்கள். அதன்பின் பொதுவாக ஒரு இடத்தில் சந்தித்து பேச நினைத்து சந்திக்கிறார்கள்.
இந்த நட்பு ஆரோக்கியமானதா அல்லது ஆபத்தானதா என்பதைப் பற்றியெல்லாம் யோசிக்காமல் அடுத்தடுத்த நகர்வுகளை நோக்கிச் செல்கின்றனர். இது பலரது குடும்பங்கள் சிதைந்து போவதற்கு வழி வகுத்து விடுகிறது. அதிலும் பல பெண்கள் முன்பின் தெரியாத நபர்களை நம்பி செல்லும்போது பலவிதமான பிரச்னைகளுக்கு ஆளாகின்றனர். அவர்களை தனிமையில் அழைத்துச் சென்று உடலுறவு வைத்துக்கொண்டு அதனை வீடியோ எடுத்து மிரட்டும் சம்பவங்களும், பணம் பறிக்கும் சம்பவங்களும், இன்னும் ஒரு படி மேலே சென்று குறிப்பிட்ட அந்த பெண்களை கொலை செய்து விட்டுச் செல்லும் சம்பவங்களும் கூட அரங்கேறி உள்ளது.
இவ்வாறு பெண்கள் சமூக வலைதளங்கள் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். இது ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, தற்போது செல்போன்களில் புதிது புதிதாக ஆப் எனப்படும் செயலிகள் வந்துள்ளன. பல செயலிகள் வந்தாலும் இவர்களது நோக்கம் ஒன்றாகத்தான் உள்ளது. ஆண்கள் பெண்களிடம் பேச வேண்டும், பெண்கள் ஆண்களிடம் பேச வேண்டும். பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இதுபோன்ற செயலிகளை சிலர் உருவாக்குகின்றனர்.
ஆரம்பத்தில் இவர்கள் கூறும் வார்த்தைகள் எந்த ஒரு ஆணுக்கும் ஆசையை தூண்டும் விதமாக அமைந்து விடுகிறது. நீங்கள் தனிமையில் உள்ளீர்களா, பெண்களிடம் பேச கூச்சப்படுகிறீர்களா, உங்களுக்கு இணையான பார்ட்னர் இல்லையா, உங்களுக்கு பெண் தோழிகள் இல்லையா, கவலைப்படாதீர்கள், இந்த செயலியை டவுன்லோட் செய்யுங்கள், இதன் மூலம் உங்களிடம் உங்கள் ஏரியாவில் உள்ள பெண்களே வந்து பேசுவார்கள் என பல விதமான ஆசை வார்த்தைகளை கூறி முதலில் அவர்களது செயலியை டவுன்லோடு செய்ய வைக்கின்றனர்.
அதன் பிறகு நமது தனிப்பட்ட விவரங்களை பதிவு செய்ய சொல்கின்றனர். அதன் பிறகு அந்த செயலியில் பல பெண்கள் ஆரம்பத்தில் நட்பாக பேசுகின்றனர். அதன் பின்பு ஆபாச பேச்சுகளை ஆரம்பித்து நீங்கள் என்னை அரை நிர்வானமாக பார்க்க வேண்டுமா, அல்லது முழு நிர்வாணமாக பார்க்க வேண்டுமா எனக்கூறி கூகுள் பே மூலம் பணத்தை அனுப்பினால் முகத்தை மட்டும் மூடிக்கொண்டு அரை நிர்வாண ஷோ, முழு நிர்வாண ஷோ காட்டுகின்றனர்.
இதில் சபலப் புத்தி உள்ள ஆண்கள் பலரும் பணத்தை தினமும் இழந்து வருகின்றனர். வடமாநில அல்லது பாலியல் தொழில் செய்யும் பெண்கள் தங்களது முகத்தையும் காட்ட தவறுவது இல்லை. இவ்வாறு சபலப் புத்தி ஆண்களை குறிவைத்து லட்சக்கணக்கில் தினமும் ஆன்லைனில் பணம் புழங்குகிறது. தற்போது இதில் கூடுதலாக சில புதிய செயலிகள் உருவாகியுள்ளது. ஏற்கனவே உள்ள செயலிகளில் நண்பர்கள் செயலி, தோழர் தோழி போன்ற செயலிகள் வடிவில் வந்தாலும், அவர்களது நோக்கம் இறுதியில் செக்ஸ் என்ற ஒரு தேடலில்தான் முடிகிறது. எதற்கு சுற்றி வளைத்து என தற்போது நேரடியாகவே சில செயலிகள் களத்தில் இறக்கி விட்டன.
தற்போது தமிழகத்தில் சில மொபைல் ஆப்கள் பிரபலமடைந்து வருகிறது. எலோலோ, கூ, குதும்ப், ஜோஷ் போன்ற பல ஆப்கள் தற்போது பிரபலம் அடைந்து வருகிறது. பண பரிவர்த்தனை டிஜிட்டல் மயமாகி வரும் வேளையில் மேலே குறிப்பிட்ட சில மொபைல் ஆப்களில் பணத்தை இமேஜ்களாக மாற்றி வருகின்றனர். இதுபோன்ற மொபைல் ஆப்பில் லைவ் வீடியோவில் வரும் பெண்களுக்கு மற்றவர்கள் போட்டிபோட்டு டைமண்ட் உள்ளிட்ட பல பரிசுகளை இமேஜ் வடிவில் வழங்குகின்றனர்.
டைமண்ட் என்றால் பல ஆயிரம் கொடுத்து வாங்க வேண்டும் என நினைக்க வேண்டாம். அவர்கள் அதற்கு அந்தப் பெயரை வைத்துள்ளனர். ஆரம்பத்தில் பத்து ரூபாயிலிருந்து பல ஆயிரம் வரை இந்த கிப்ட் பொருட்கள் குறிப்பிட்ட அந்த செயலியில் உள்ளன. ஷோ காட்டும் பெண்களுக்கு நாம் குறிப்பிட்ட அந்த பரிசுப் பொருட்களை அந்த செயலியை நடத்தும் நபர்களிடமிருந்து வாங்கி அந்த பெண்ணுக்கு அனுப்ப வேண்டும்.
நாம் அனுப்பும் பொருட்களை மற்றவர்களும் பார்ப்பார்கள், கமெண்ட் செய்வார்கள். உங்களிடம் அந்தப் பெண்ணும் தொடர்ந்து கமெண்ட் செய்து பேசிக்கொண்டே இருப்பார். அதன் பிறகு ஒரு மாதத்திற்கு ஒருமுறை எந்தப் பெண் எவ்வளவு கிப்ட் வாங்கியுள்ளாரோ அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை அந்த செயலி வழங்கி விடுகிறது. அதில் ஒரு குறிப்பிட்ட தொகையை அந்த செயலியை நடத்துபவர்கள் எடுத்துக் கொள்கின்றனர். வெளியே சென்று பாலியல் தொழிலில் ஈடுபடாமல் வீட்டிலிருந்தபடியே மற்றவர்கள் நம்மை தொடாமல் எவ்வாறு தொழில் செய்யலாம் என்பதை இந்த செயலிகள் உணர்த்தி விடுகின்றன.
இதனை பார்க்கும் ஆண்கள் பணத்தை வாரி இரைக்கின்றனர். இவ்வாறு தற்போது கிப்ட் வடிவில் இந்த பாலியல் வர்த்தகம் கொடிகட்டி பறக்கிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் பணம் வருகிறது என்பதற்காக பெண்கள் பலரும் நேரம் காலம் பார்க்காமல் அந்த மொபைல் செயலியிலேயே லைவ் வீடியோவில் புழங்குகின்றனர். கல்லூரி மாணவிகள் முதல் குடும்ப பெண்கள் வரை இதில் ஈடுபடுகின்றனர். பலரும் தங்களது முகம் வெளியே தெரியாமல் பார்த்துக் கொள்கின்றனர்.
இதுபோன்ற சமூக பொழுதுபோக்கு மொபைல் செயலிகளை உரிமம் பெற்று இயக்கினாலும் அதன் தாக்கம் தவறான பாதையில் இளம் தலைமுறையினரை வழிநடத்தி செல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுபோன்ற செயலிகளை பயன்படுத்துபவர்கள் மொபைல் எண் மற்றும் அவர்களது புகைப்படம் பல இடங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இதனால் சைபர் கிரைம் குற்றங்களும் அதிகரித்து வருகிறது.
ஒருவர் பணத்தை தருகிறார், அவரது சபல புத்திக்காக மற்றொருவர் செயலியை உருவாக்கி வைத்துள்ளார்.
பணம் தேவை என நினைக்கும் பெண்கள் தங்களது உடல் பாகங்களை காண்பித்து பணம் பெற்றுக் கொள்கின்றனர். இவ்வாறு இந்தத் தொழில் நடந்து வருகிறது. ஆனால் இந்த தொழிலை உற்று கவனிக்கும் மாபியா கும்பல் குறிப்பிட்ட சிலரை மட்டும் தேர்ந்தெடுத்து அவரது வீடியோ போன்ற விஷயங்களை டவுன்லோட் செய்துகொண்டு அதன் பிறகு குறிப்பிட்ட பெண்களை அல்லது ஆண்களை போன் செய்து மிரட்டும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
வீட்டில் இருக்கும் சில பெண்கள் காலை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு கணவர் வேலைக்குச் சென்ற பிறகு, செல்போனை எடுத்து வைத்துக்கொண்டு உட்கார்ந்து விடுகின்றனர். அவர்களை குறிவைத்து இது போன்ற பல செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளன. வீட்டில் உட்கார்ந்தவாரே பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறுகின்றனர். மேலும் தனியாக மனசோர்வில் இருக்கும் ஆண்களிடம் நாலு வார்த்தை ஆறுதலாக நீங்கள் பேசினால் மட்டும் போதும் என ஆரம்பத்தில் ஆசை வார்த்தை கூறி இந்த செயலிக்குள் கொண்டு வருகின்றனர்.
அதன் பிறகு உள்ளே நடக்கும் விஷயங்களை பார்த்து சில பெண்களுக்கும் இவ்வளவு பணம் சம்பாதிக்கிறார்களா என நினைத்து அடுத்தடுத்த நகர்வுகளுக்கு சென்று விடுகின்றனர். ஒரு கட்டத்தில் அது அவர்களது குடும்பம் மற்றும் அவர்களுக்கே மிகப்பெரிய பிரச்னைகளை ஏற்படுத்தி விடுகிறது. எனவே ஏற்கனவே டிக்டாக் போன்ற செயல்களில் அதிக குடும்ப பெண்கள் ஈடுபட்டு பல கலாச்சார சீரழிவுகளும் சில மரணங்களும் ஏற்பட்டன. இதனால் அந்த குறிப்பிட்ட செயலியை தடை செய்ய வேண்டும் என பல்வேறு குரல்கள் எழும்பின.
அதன் பிறகு டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கபட்டது. தற்போது ஒரு அரக்கன் சென்றால் அதிலிருந்து ஆயிரம் அரக்கன்கள் வருவது போல பல மொபைல் செயலிகள் நமது கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் சிதைக்கும் வகையில் உருவாக்கப்பட்டு, இவை அனைத்தும் பாலியல் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தக்கூடிய செயலிகளாக உள்ளன. எனவே இவைகளையும் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வலுத்து வருகிறது. எனவே மொபைல் செயலிகளுக்கு ஒன்றிய அரசு கடுமையான கடிவாளங்களை பிறப்பிக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
* சைபர் கிரைம் பிரச்னை
பாலியல் தேடல் அல்லது அது சம்பந்தமான செயலிகளை தொடர்ந்து சைபர் குற்றத்தில் ஈடுபடும் நபர்கள் கண்காணித்து வருகின்றனர். இதில் பெண்களின் புகைப்படம் மற்றும் ஆண்களின் புகைப்படம் மற்றும் சாட்டிங் உள்ளிட்ட விவரங்களை சேகரித்து அதன் பிறகு அவர்களை மிரட்டி பார்க்கின்றனர். இதில் சம்பந்தப்பட்டவர்கள் பயந்து தங்களது மானம் போய்விடக் கூடாது என்பதால் பணத்தை வாரி இரைக்கின்றனர்.
மேலும் பல்வேறு ஆண்களை பெண்கள் பெயரில் பேக் ஐடி தயார் செய்து ப்ரீ ஷோ என்ற பெயரில் ஆண்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு அவர்களை ஏமாற்றுகின்றனர். பொதுவாக இது போன்ற விஷயங்களில் மாட்டிக் கொள்ளும் நபர்கள் தங்களது பெயர் வெளியே வந்துவிடும் என்பதால் புகார் கொடுக்காமல் அப்படியே இருந்து விடுகின்றனர். இது தவறு செய்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்து விடுகிறது. எனவே தேவையில்லாத விரும்பத்தகாத செயலிகளை பெண்கள் மற்றும் ஆண்கள் பயன்படுத்த வேண்டாம் என போலீசார் எச்சரிக்கின்றனர்.
* தவறான தேடல்
சமூக வலைதளங்கள் மற்றும் தவறான செயலிகளில் பெண்கள் அதிகளவில் தற்போது ஈடுபடுவது குறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், சமீப காலமாக பல்வேறு செயலிகளில் பெண்கள் அதிகளவில் சாட்டிங் எனப்படும் கலந்துரையாடலில் ஈடுபடுகின்றனர். இதில் ஒருபடி மேலே சென்று பணம் வருகிறது என்ற நோக்கத்தில் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுகின்றனர். இது முற்றிலும் தவறான ஒரு விஷயம். பெண்கள் நாம் சாட்டிங் செய்கிறோம், அதன் பிறகு அதில் இருந்து வெளியே வந்து விடுகிறோம் என நினைத்துக் கொள்கிறார்கள்.
ஆனால் அவர்கள் செய்யும் ஒவ்வொரு விஷயமும் பதிவாகிறது என்பதை மறக்கக்கூடாது. எனவே பிரச்னை ஏற்படும்போது போலீசார் தங்களுக்குத் தேவையான ஆவணங்களை தயார் செய்து பல்வேறு வழக்குகளில் பெண்களையும் கைது செய்கின்றனர். எனவே பணம் வருகிறது என்ற நோக்கத்தில் பெண்கள் தவறான பாதையில் செல்லக்கூடாது, செல்போனில் நீங்கள் செய்யும் ஒவ்வொரு பதிவும் கண்காணிக்கப்படுகிறது என்பதை பொதுமக்கள் மறந்துவிடக்கூடாது என்றார்.
The post தனிமையில் உள்ளீர்களா… பெண்களிடம் பழக வேண்டுமா… என கவர்ச்சி விளம்பரம்: டேட்டிங் செயலியில் சிக்கி திசைமாறும் இளைஞர்கள் appeared first on Dinakaran.