×

அமைந்தகரை பகுதியில் திருடுவதற்காக வந்த இடத்தில் போதையில் தூங்கிய வாலிபர்: போலீசார் சுற்றிவளைத்து கைது

அண்ணாநகர்: அமைந்தகரை பகுதியில் திருடுவதற்காக வந்த இடத்தில் போதையில் குறட்டை விட்டு தூங்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். அமைந்தகரை, நெல்சன் மாணிக்கம் சாலையில், கிரீன் டிரெண்ட்ஸ் என்ற பிரபல தனியார் பியூட்டி பார்லர் இயங்கி வருகிறது. இங்கு, நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் ஊழியர்கள் பணிமுடிந்து, பியூட்டி பார்லரை பூட்டிவிட்டு சென்றனர்.
நேற்று காலை, வழக்கம் போல் ஊழியர்கள் பார்லரை திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உள்ளே சென்று பார்த்த போது, பொருட்கள் எல்லாம் சிதறி கிடந்தன. பொருட்கள் மற்றும் லேப்டாப் உடைப்பட்டு இருந்தது.  இதையடுத்து பியூட்டி பார்லர் மேனேஜர், உடனடியாக அமைந்தகரை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சோதனை செய்தனர். அப்போது, கடையின் மாடியிலிருந்து குறட்டை சத்தம் கேட்டது. உடனே, போலீசார் மாடிக்கு ஓடிச்சென்று பார்த்தபோது, மது போதையில் ஒருவர், மது பாட்டில்களுடன் ஹாயாக குறட்டை விட்டு துாங்கிக் கொண்டிருந்தார்.

போலீசார் அவரை தட்டி எழுப்பி உட்கார வைத்து விசாரித்தனர். அப்போதுதான் அந்நபர் ஆந்திராவை சேர்ந்த கிஷோர் (24) என்பது தெரிந்தது. நள்ளிரவில் பியூட்டி பார்லர் பூட்டை உடைத்து திருட வந்த இவர், அங்கு பணம் இல்லாததால், ஆத்திரத்தில் அங்கிருந்து பொருட்களை உடைத்து சேதப்படுத்தி உள்ளார். மதுபோதையில் இருந்த அவர், பின்னர் கடையின் மாடிக்கு சென்று, பாக்கெட்டில் வைத்திருந்த மதுபானத்தை எடுத்து குடித்துவிட்டு, பின்னர் கிளம்பி போகலாம் என்று நினைத்துள்ளார்.

ஆனால், மது அருந்தியதும் அளவுக்கு அதிகமான போதையால், அங்கேயே தூங்கியது தெரிந்தது. இதைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், வேறு ஏதாவது கடைகளில் திருடியுள்ளாரா என்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். திருட வந்த இடத்தில் மதுபோதையில் குறட்டை விட்டுத் தூங்கிய இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் நுங்கம்பாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post அமைந்தகரை பகுதியில் திருடுவதற்காக வந்த இடத்தில் போதையில் தூங்கிய வாலிபர்: போலீசார் சுற்றிவளைத்து கைது appeared first on Dinakaran.

Tags : Aminkarai ,Annanagar ,Green Trends ,Nelson Manickam Road, Aminkarai ,Dinakaran ,
× RELATED கோயம்பேடு மார்க்கெட்டில் விதிமீறி...