×

திருப்பூர் அருகே வெல்டிங் காஸ் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து

அவிநாசி: அவிநாசி அருகே எளிதில் தீ பற்றக்கூடிய வெல்டிங் காஸ் (பிரோபைலின் காஸ் ) லோடு ஏற்றிகொண்டு வந்த டேங்கர் லாரி எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கோவை வழியாக, குஜராத் செல்ல வெல்டிங் கேஸ் (பிரோபைலின்) லோடு ஏற்றிகொண்டு வந்த நாமக்கலை சேர்ந்தவருக்கு சொந்தமான டேங்கர் லாரியை டிரைவர் முருகன் (43) என்பவர் ஓட்டி வந்தார். திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்து நியூ திருப்பூர் அருகே சர்வீஸ் சாலையில் லாரி ஓட்டுநர்கள் ஓய்வெடுக்கும் பகுதியில் இன்று அதிகாலை லாரியை டிரைவர் நிறுத்தி சிறிது நேரம் ஓய்வெடுத்தார்.

பிறகு, லாரியை இயக்கி புறப்பட்டார். பழங்கரை அருகே சர்வீஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தது. சர்வீஸ் சாலையில் இருந்து, ஆறு வழிச்சாலையில் செல்வதற்காக வலதுபக்கம் திருப்பிய போது,, சாலையோரம் இருந்த மழைநீர் வடிகால் பாதையில் சக்கரம் இறங்கி நிலை தடுமாறி ஆறு வழிச்சாலையோர தடுப்பின் மீது டேங்கர் லாரி மோதி கவிழ்ந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக டிரைவர் முருகன் காயமின்றி உயிர் தப்பினார். டேங்கர் லாரிக்கு சேதம் ஏற்படாததால் பெரும் தீ விபத்து, உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு அவிநாசி தீயணைப்பு மீட்பு பணி குழுவினர் விரைந்து வந்து இரண்டு ராட்சத கிரேன் மூலம் சுமார் மூன்று மணி நேரம் போராடி அசம்பாவிதம் இன்றி லாரியை மீட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post திருப்பூர் அருகே வெல்டிங் காஸ் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Avinashi ,Kochi ,Kerala ,Gujarat ,Coimbatore ,Dinakaran ,
× RELATED திருப்பூர் பனியன் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து..!!