×

ஜனவரி 1ம் தேதி முதல் அமல் புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மூன்று ஆண்டுகளுக்கு பின் அதிகரிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை (வாட்) பெட்ரோலுக்கு 2.44% மற்றும் டீசலுக்கு 2.57% உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு வரும் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. புதுச்சேரியில் பெட்ரோலுக்கான வாட் வரி 14.54 சதவீதத்திலிருந்து 16.98 சதவீதமாகவும், காரைக்கால் பகுதியில் 14.55 சதவீதத்திலிருந்து 16.99 சதவீதமாகவும், மாஹே பகுதியில் 13.32 சதவீதத்திலிருந்து 15.79% ஆகவும், ஏனாமில் 15,26 சதவீதத்திலிருந்து 17 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

டீசல் மீதான வாட் வரி புதுச்சேரியில் 8.65 சதவீதத்திலிருந்து 11.22 சதவீதமாக உயர்ந்துள்ளது. காரைக்காலில் 8.66 சதவீதத்திலிருந்து 11.23 சதவீதமாகவும் மாஹேவில் 6.91 சதவீதத்திலிருந்து 9.52 சதவீதமாகவும், ஏனாமில் 8.82 சதவீதத்திலிருந்து 11.48 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, புதுச்சேரியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.94.26, காரைக்காலில் 94.03, மாகேவில் – ரூ.91.92 மற்றும் ஏனாமில் ரூ.94.92 ஆக உள்ளது. டீசல் விலை புதுச்சேரியில் ரூ.84.48, காரைக்காலில் ரூ.84.35, மாஹே ரூ.81.9, மற்றும் ஏனாமில் ரூ.84.54 இருந்து வருகிறது.

தற்போது வாட் வரி உயர்வால் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு லிட்டருக்கு ரூ.2 அதிகரிக்கும். இந்த விலை உயர்த்தப்பட்ட போதிலும், புதுச்சேரியில் எரிபொருள் விலை தமிழ்நாடு, கேரளா மற்றும் ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களை விட குறைவாகவே இருக்கும். வாட் வருவாயை உயர்த்துவதை நோக்கமாக கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். எரிபொருளின் மீதான கலால் வரியை ஒன்றிய அரசு நவம்பர் 2021ம் ஆண்டு குறைத்த பிறகு பெட்ரோலுக்கு லிட்டருக்கு வாட் வரி 7 சதவீதம் குறைக்கப்பட்டதன் காரணமாகவே அரசாங்கத்தின் வருவாய் பெரிதும் பாதித்தது.

இதனால் கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.740 கோடியாக இருக்க வேண்டிய வாட் வரி ரூ.640 கோடியாக குறைந்துள்ளது. புதிய விகிதங்கள் அண்டை மாநிலங்களுக்கான போட்டித்தன்மையை தக்கவைக்கும் வகையில், அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பெட்ரோல் டீசல் விலை உயர்வை தொடர்ந்து புதுச்சேரிக்கும், கடலூர் மற்றும் விழுப்புரம் போன்ற தமிழக நகரங்களுக்கும் இடையே பெட்ரோல் விலை வித்தியாசம் லிட்டருக்கு ரூ.6.54 ஆகவும், டீசல் விலை வித்தியாசம் லிட்டருக்கு ரூ.7.91 ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post ஜனவரி 1ம் தேதி முதல் அமல் புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மூன்று ஆண்டுகளுக்கு பின் அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Dinakaran ,
× RELATED புதுச்சேரியில் சபாநாயகர் மீதான...