புதுடெல்லி: ஹத்ராஸ் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த நிலையில் ரூ.1.5 கோடி கேட்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸில் கடந்த 2020ம் ஆண்டில் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரில் 3 பேர் விடுவிக்கப்பட்டனர். ஒருவர் மட்டும் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு குறித்து கடந்த 14ம் தேதி ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில் கூறும்போது, ‘ஹத்ராஸ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சுதந்திரமாகத் திரியும்போது, பாதிக்கப்பட்டவரின் குடும்பம் அடைத்து வைக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.
இந்நிலையில் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட 3 பேரின் சார்பாக அவரது வழக்கறிஞர் முன்னா சிங் புந்திர், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுகுறித்து முன்னா சிங் புந்திர் கூறுகையில், ‘இந்த வழக்கில் காங்கிரஸ் உட்பட பல கட்சிகள் அரசியல் ஆதாயத்துக்காக தலையிட்டன.
இதனால் விசாரணை பாரபட்சமின்றி நடைபெறுவது பாதிக்கப்படுகிறது. இதுதொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்டுள்ள கருத்து, வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட எங்களது கட்சிக்காரர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளது. இது தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே, ரூ.1.5 கோடி கேட்டு ராகுல் காந்தி மீது பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 15 நாட்களுக்குள் உரிய பதிலை அவர் அளிக்கவேண்டும்’ என்றார்.
The post ஹத்ராஸ் விவகாரம் குறித்து கருத்து; ரூ.1.5 கோடி கேட்டு ராகுல் மீது வழக்கு: உத்தரபிரதேச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.