×

அருமனை அருகே பன்றி பண்ணைக்கு இறைச்சி கழிவுகளை ஏற்றி வந்த சரக்கு வாகனம்: வீடியோ எடுத்த வாலிபர் மீது தாக்குதல்; டிரைவர் கைது

அருமனை: அருமனை அருகே படபச்சை கைதச்சன்விளை பகுதியை சேர்ந்தவர் வில்சன். அவரது மகன் பிவின் (29). இவர் இன்று காலை டீக்கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் கேரள மாநில பதிவெண் கொண்ட சரக்கு வாகனம் பழுதடைந்து நின்று கொண்டிருந்தது. மேலும் வாகனத்தின் பின்பகுதியில் இருந்து இறைச்சி கழிவு நீர் கொட்டிக்கொண்டிருந்தது. இதனை கவனித்த பிவின் தனது செல்போனில் படம் பிடித்ததோடு அருமனை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்து கொண்டிருந்தார். அந்த சமயம் இதனை பார்த்த வாகன டிரைவர் அப்பகுதியில் உள்ள பன்றி பண்ணை நடத்துபவர்களிடம் தெரிவித்தார். அதாவது சரக்கு வாகனத்தில் இறைச்சி கழிவுகளை ஏற்றி பன்றி பண்ணைக்கு கொண்டு செல்வதாக தெரிகிறது.

இதனை தொடர்ந்து பைக்கில் வந்த 2 பேர் மற்றும் சரக்கு வாகன டிரைவர் சேர்ந்து பிவினை தாக்கினர். மேலும் அவருடைய செல்போனை உடைத்து சேதப்படுத்தினர். இதையடுத்து மற்றொரு டெம்போவை வரவழைத்து அதனை பழுதடைந்து நின்ற வாகனத்துடன் கயிறு கட்டி சுமார் 300 மீட்டர் தூரத்தில் உள்ள பன்றி பண்ணைக்கு கொண்டு சென்றனர். இதற்கிடையே முகத்தில் காயத்துடன் பிவின் அருமனை காவல் நிலையத்துக்கு சென்று புகார் அளித்தார். தொடர்ந்து அவர் அருமனை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே போலீசார் வழக்குப்பதிவு செய்து கழிவுகளை ஏற்றி வந்து வாலிபரை தாக்கிய டிரைவரான கேரள மாநிலம் ஆனாவூழ் பகுதியை சேர்ந்த புஷ்பராஜை கைது செய்தனர். மேலும் பன்றி பண்ணையில் நிற்கும் கழிவுகளை ஏற்றி வந்த சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post அருமனை அருகே பன்றி பண்ணைக்கு இறைச்சி கழிவுகளை ஏற்றி வந்த சரக்கு வாகனம்: வீடியோ எடுத்த வாலிபர் மீது தாக்குதல்; டிரைவர் கைது appeared first on Dinakaran.

Tags : Arumanai ,Wilson ,Patapachai Kaithachanvilai ,Bivin ,Kerala ,Dinakaran ,
× RELATED இறைச்சி கழிவு ஏற்றி வந்த டெம்போவை படம் பிடித்த வாலிபர் மீது தாக்குதல்