சாத்தூர், டிச.28: சாத்தூர் நகராட்சியில் பகல் நேரத்திலும் தெரு விளக்குகள் எரிவதால் மின்சாரம் வீணாகிறது. சாத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட காமராஜர்புரம், வெம்பககோட்டை சாலைப் பகுதியில் ஏராளமான தெரு மின்விளக்குகள் உள்ளன. இந்த மின்விளக்குகள் மாலை 6 மணிக்கு போடப்பட்டு மறுநாள் காலை 6 மணிக்கு நகராட்சி பணியாளர்களால் அணைக்கப்படும். இந்தநிலையில் நேற்று பகலில் மின்விளக்குகள் அணையாமல் எரிந்து கொண்டிருந்தது.
கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் உள்ள தெருவிளக்குகள் காலை நேரமும் தொடர்ந்து எரிந்து வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மின்சாரம் விரயமாவதுடன் தெருவிளக்குகள் விரைவில் பழுதாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தெருவிளக்குகளை முறையாக பராமரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சிலர் கூறுகையில், தெருவிளக்குகள் இரவு பகல் பாராமல் எரிகின்றன. பகல் நேரத்தில் தெருவிளக்குகள் எரிவதன் மூலம் யாருக்கும் எந்த பயனும் இல்லை. மாறாக அரசிற்கு தான் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
The post சாத்தூரில் பகலில் எரியும் தெருவிளக்குகள் appeared first on Dinakaran.