*1000 ஆண்டுகள் பழமையானது
பொன்னை : மேல்பாடி அருகே 1000 ஆண்டுகள் பழமையான 1ம் சோழ அரசன் பராந்தக சோழனின் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா மேல்பாடி அருகே மிகவும் பழமையான பெருமாள் கோயில் உள்ளது. சிதிலமடைந்த நிலையில் இருந்த இக்கோயிலில் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு அப்பகுதி பொதுமக்கள் புனரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கடந்த வாரம் இக்கோயில் பகுதியில் தோண்டிய போது பழமையான கல்வெட்டுகள் கிடைத்துள்ளது. இதனை அடுத்து நேற்று இந்த கல்வெட்டுகளை ஆய்வு செய்ய விழுப்புரம் மாவட்ட தொல்லியல் துறை ஆய்வாளர் ரமேஷ் தலைமையிலான தொல்லியல் துறை குழுவினர் இப்பகுதியில் கல்வெட்டுகளை ஆய்வு மேற்கொண்டனர். அதில், சுமார் 1000 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள் என்பதும், ஒன்றாம் சோழ அரசர்களான பராந்தக சோழ அரசனின் புகழை எடுத்துரைக்கும் கல்வெட்டுகள் ஆகும்.
மேலும் இக்கல்வெட்டுகளில், மேல்பாடி எனும் வீரநாராயணபுரம் இந்த ஊரின் பெயர் என்றும், முதலாம் பராந்தக சோழனால் இப்பகுதியில் ஸ்ரீவீரநாராயண பெருமாள் கோயில் கட்டப்பட்டு இருந்தது. மேல்பாடி எனும் வீரநாராயணபுரத்தில் வியாபாரிகள் அதிகமானோர் வசித்து வந்ததாகவும், இக்கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளதாக கல்வெட்டு ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மேலும் இக்கல்வெட்டுகளை பராமரிக்க வேண்டும் எனவும், இதற்கு அரசு தொல்லியல் துறை நிதி ஒதுக்கீடு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post மேல்பாடி அருகே 1ம் சோழ அரசன் பராந்தக சோழனின் கல்வெட்டுகள் கண்டெடுப்பு appeared first on Dinakaran.