×

புதிய பாலம் கட்டுவதை எதிர்த்து போராட்டம்; மோடிக்கு ஆதரவு; பாஜகவுக்கு எதிர்ப்பு: குஜராத்தில் வைக்கப்பட்ட பேனர்களால் பரபரப்பு

வடோதரா: குஜராத்தில் புதிய பாலம் கட்டுவதற்கு மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், மோடிக்கு ஆதரவாகவும், பாஜகவுக்கு எதிர்ப்பாகவும் ஆங்காங்கே பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தின் வடோதரா உள்ள சாமா, பிருந்தாவன் சார், கோடியார் நகர், சோமா தலாவ், வாஸ்னா சாலை சந்திப்புகளில் புதிய மேம்பாலம் கட்டும் பணியை வடோதரா மாநகராட்சி தொடங்கியுள்ளது. வாஸ்னா சாலை சந்திப்பில் மேம்பாலம் மற்றும் பைலிமா கால்வாயின் மீது பாலம் கட்டப்படுவதை எதிர்த்து உள்ளூர் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சமீபத்தில், மேம்பாலம் பாலத்தை எதிர்த்து பதாகைகளை வைத்திருந்தனர். இந்த பாலம் கட்டப்பட்டால், அடுத்த தேர்தலில் எந்த அரசியல் தலைவரும் வாக்கு கேட்டு வரக்கூடாது என்றும், வாஸ்னா சந்திப்பில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் தேவையற்றது என்றும் உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். அப்பகுதி மக்கள் ஒருபக்கம் போராட்டம் நடத்தி வந்தாலும் கூட, அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக உள்ளூர் பாஜக தலைவர்களும் போராடி வருகின்றனர். இதற்கிடையே வடோதராவில் கட்சி அலுவலகம் கட்டுமானத்திற்கான கல்வெட்டு திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் உள்ளிட்ட தலைவர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

அப்போது நகரின் முக்கிய பகுதியில், பாஜகவுக்கு எதிரான பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. ‘கிராந்தி சேனா’ என்ற அமைப்பினர் சார்பில் பேனர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த அமைப்பானது உள்ளூர் பாஜகவை சேர்ந்த சிலரால் உருவாக்கப்பட்டது என்றும், அவர்கள் தான் இதுபோன்ற பேனர்களை வைத்திருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அந்த பேனரில் #PROModi, #AntiBJP என்ற ஹேஷ்டேக் பிரிண்ட் செய்யப்பட்டுள்ளது. மேலும், ‘மோடி அவர்களே… நீங்கள் உருவாக்கிய தலைவர் (முதல்வர்) மக்களை குருடாக்குகிறார்’ என்றும் எழுதப்பட்டிருந்தது.

பாஜகவின் கோட்டை என்று கூறப்படும் குஜராத்தில், மோடிக்கு ஆதரவாகவும், பாஜகவுக்கு எதிராகவும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post புதிய பாலம் கட்டுவதை எதிர்த்து போராட்டம்; மோடிக்கு ஆதரவு; பாஜகவுக்கு எதிர்ப்பு: குஜராத்தில் வைக்கப்பட்ட பேனர்களால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags :
× RELATED அமித்ஷாவை கண்டித்து 27ம் தேதி...