×

ரேலா மருத்துவமனையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

தாம்பரம்: குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில் கிறிஸ்துமஸ் விழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. தி ஆல்ட் ஸ்கூலைச் சேர்ந்த சாண்ட்டாகிளாஸ் வேடமணிந்த குழந்தைகளின் குழுவை ரேலா மருத்துவமனை வரவேற்றது. சிறப்பு குழந்தைகள் மற்றும் 2 வயது முதல் 14 வயது வரையிலான 100 சிறார்கள், தங்கள் கைகளிலும், பைகளிலும் பரிசுகளையும், சாக்லேட்டுகளையும் ஏந்தியவாறு மருத்துவமனைக்கு வந்தனர். ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களோடு உற்சாகத்துடன் சென்று நோயாளிகளையும், அவர்களை பார்த்துக்கொள்பவர்களிடமும் அன்பை பகிர்ந்து கொண்டனர். மேலும், கேரல் பாடல்களை பாடியும், நடனமாடியும் பரிசுப் பொருள் வழங்கினர். இதில், தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் கோ.காமராஜ் கலந்துகொண்டார்.

பிறகு ரேலா மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் முகமது ரேலா பேசுகையில், ‘‘ஒன்றுபட்ட சமூகம் என்ற உணர்வை வளர்ப்பதில் எங்கள் மருத்துவமனை உறுதி கொண்டிருக்கிறது. எனவே, பண்டிகைகள், திருவிழாக்கள் வரும்போது அனைவரையும் ஒருங்கிணைத்து மகிழ்ச்சிகரமன தருணங்களாக நாங்கள் அவற்றை மாற்றுகிறோம். இந்த இளம் சாண்டாக்கள் வெளிப்படுத்தும் உற்சாகமும், நம்பிக்கையும் அவர்கள் எதிர்கொள்ளும் அனைவரையும் மகிழ்ச்சியானவர்களாக மாற்றி, புன்னகையை வரவழைப்பதை காண்பது மனநிறைவளிக்கிறது.

விழாக் கால கொண்டாட்டத்தில் எங்கள் சமூகத்தினரை ஈடுபடச் செய்வது மருத்துவ சிகிச்சையையும் கடந்த ஒரு நம்பிக்கையை தரும்’’ என்றார். தி ஆல்ட் பள்ளியின் நிறுவனர் தீபா ஆத்ரேயா பேசுகையில், ‘தி ஆல்ட் பள்ளியில், கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியை மக்கள் மத்தியில் பரப்புவதற்காக எங்கள் குழந்தைகளை ஒவ்வொரு ஆண்டும் சாண்ட்டா கிளாஸ் தாத்தா தோற்றத்தை அணியுமாறு செய்து, நகரின் பல இடங்களுக்கும் நேரில் சென்று வாழ்த்தி மகிழ்ச்சியை பரப்பி வருகிறோம்’’ என்றார்.

The post ரேலா மருத்துவமனையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : Christmas ,Rela ,Hospital ,Tambaram ,Rela Hospital ,Chromepet ,Santa Claus ,Old School ,Dinakaran ,
× RELATED கிறிஸ்துமஸ் கேக்! -வாசகர் பகுதி