×

‘டெல்லி’ வந்தாலும் ‘கில்லி’ வந்தாலும் 2026ல் திமுக ஆட்சிதான் வரும்: மணலி பொதுக்கூட்டத்தில் சைதை சாதிக் பேச்சு

திருவொற்றியூர்: டெல்லி வந்தாலும் கில்லி வந்தாலும் 2026ல் திமுக ஆட்சிதான் வரும் என்று மணலியில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் தலைமை பேச்சாளர் சைதை சாதிக் பேசியுள்ளார். சென்னை வடகிழக்கு மாவட்ட இளைஞரணி திமுக சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் மணலி அண்ணா சிலை அருகில் நடந்தது. மாவட்ட துணை அமைப்பாளர் கேபிள் வேல்கணேஷ் தலைமை வகித்தார். சென்னை மண்டல பொறுப்பாளர் ஜோயல், கே.பி.சங்கர் எம்எல்ஏ, மண்டலக்குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம் முன்னிலை வகித்தனர். மாவட்ட அமைப்பாளர் ஆர்.டி.மதன்குமார் வரவேற்றார். சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ, தலைமை பேச்சாளர் சைதை சாதிக் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு தையல் இயந்திரம், இஸ்திரி பெட்டி, சேலை உள்பட 1,000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

கூட்டத்தில், சைதை சாதிக் பேசியதாவது: கட்சி ஆரம்பித்தவுடன் நடிகை திருமணத்திற்கு கோவா சென்ற நடிகர் திமுகவை ஒழிப்போம் என்று பேசுகிறார். இன்று பத்திரிகை, தொலைக்காட்சிகளில் 2026ல் யார் ஆட்சிக்கு வருவார், அதிக வாக்குகள் யார் பெறுவார்கள், கூட்டணி நீடிக்குமா என்று கேள்வி எழுப்புகிறார்கள். டெல்லி வந்தாலும் கில்லி வந்தாலும் 2026ல் திமுகதான் ஆட்சிக்கு வரும். இந்தியாவில் பெண்கள் முன்னேற்றத்திற்காக நல்லது செய்த அரசு இந்தியாவில் திமுகவை விட்டால் வேறு அரசு இல்லை. அம்பேத்கரை அமித்ஷா நாடாளுமன்றத்தில் இழிவுபடுத்துகிறார். இதற்கு எடப்பாடி வாய் திறந்தாரா, அம்பேத்கர் புத்தகத்தை வெளியிட்ட நடிகர் கண்டனம் தெரிவித்தாரா, நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் அமைச்சர் அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசியவுடன் 24 மணி நேரத்தில் வீதிக்கு வந்து திமுக போராட்டம் நடத்தியது. இவ்வாறு அவர் கூறினார். இதில், மண்டலக்குழு தலைவர் தி.மு.தனியரசு, பகுதிச் செயலாளர்கள் அருள்தாசன், புழல் நாராயணன் மற்றும் பல்வேறு அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post ‘டெல்லி’ வந்தாலும் ‘கில்லி’ வந்தாலும் 2026ல் திமுக ஆட்சிதான் வரும்: மணலி பொதுக்கூட்டத்தில் சைதை சாதிக் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Delhi ,Gilli ,DMK ,Saidi Saadi ,Manali ,Chief speaker ,Chennai North East District Youth Wing ,Deputy Chief Minister ,Udhayanidhi Stalin ,DMK… ,
× RELATED டெல்லியில் பிப்ரவரியில் பேரவை...