×

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்ற குகேஷுக்கு ரூ.5 கோடி பரிசு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


சென்னை: உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்ற குகேஷுக்கு ரூ.5 கோடி பரிசு வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது தலைமையிலான அரசு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறைக்கு சிறப்பான முக்கியத்துவத்தை அளித்து வருகின்றது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றதிலிருந்து, பல்வேறு சர்வதேச விளையாட்டுப் போட்டிகளும், மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளும் தமிழ்நாட்டில் அனைவரும் பாராட்டும் வண்ணம் நடத்தப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் தமிழ்நாட்டில் கடந்த 2022 ஆம் ஆண்டு மிகச் சிறப்பாக திட்டமிட்டு, நடத்தப்பட்டன. அதில் பங்குபெற்று வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து வீரர்களையும் முதலமைச்சர் நேரில் அழைத்துப் பாராட்டி, பரிசுகளை வழங்கினார். தற்போது சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் (FIDE World Championship 2024) தமிழ்நாட்டைச் சேர்ந்த டி. குகேஷ் நேற்று நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரென் அவர்களை வென்று சாதனை படைத்துள்ளார். மிக இளம் வயதிலேயே உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்று உலக செஸ் சாம்பியனாக வாகைசூடி சாதனை படைத்து, இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்த டி. குகேஷ் அவர்களை முன்னதாக தனது எக்ஸ் தளத்தில் பாராட்டி வாழ்த்தி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டிருந்ததோடு, தொலைபேசி வாயிலாகவும் அவரைத் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ள குகேஷ் அவர்களுக்கு 5 கோடி ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கிட வேண்டுமென்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் அவர்களுக்குக் கோரிக்கை விடுத்திருந்தார். அதனையேற்று, டி. குகேஷ் அவர்களை மேலும் ஊக்குவிக்கும் வகையில், அவருக்கு 5 கோடி ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

The post உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்ற குகேஷுக்கு ரூ.5 கோடி பரிசு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Gukesh ,World Chess Championship ,First Minister ,Mu. K. Stalin ,Chennai ,K. Stalin ,Chief Minister ,Mu. K. ,Stalin ,Dinakaran ,
× RELATED உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு...