செங்கம், டிச.13: குப்பநத்தம் அணையில் இருந்து வினாடிக்கு 1,050 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த குப்பநத்தம் அணையில் தொடர் மழை காரணமாக நீர்மட்டம் மளமளவென உயர்ந்தது. அதன்படி, அணையின் நீர்மட்டம் 59.04 அடியில் 55 அடியை நேற்று தொட்டது. மேலும், அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,050 கனஅடியாக உள்ளது. எனவே, அணையின் பாதுகாப்பு கருதி 1,050 கனஅடி நீரும் உபரிநீராக செய்யாற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் இருந்து 3வது முறையாக உபரிநீர் வெளியேற்றப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், உபரிநீர் திறப்பால் செய்யாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் ஆற்றின் கரையோரம் உள்ள தொட்டிமடுவு, குப்பநத்தம், பரமனந்தல், கொட்டாவூர், வளையாம்பட்டு, செங்கம், தீத்தாண்டப்பட்டு ஆகிய கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
The post குப்பநத்தம் அணையில் 1,050 கனஅடி உபரிநீர் வெளியேற்றம் கரையோர கிராமங்களுக்கு எச்சரிக்கை appeared first on Dinakaran.