திருவண்ணாமலை, டிச.13: திருவண்ணாமலையில் மீண்டும் கனமழை தொடர்வதால், தீபமலைப்பகுதியில் மண் சரிவு ஏற்படும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் மீட்புக்குழு வரவழைக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் பெஞ்சல் புயல் காரணமாக கடந்த 30ம் தேதி மற்றும் 1ம் தேதிகளில் வரலாறு காணாத அளவில் கனமழை பெய்தது. தொடர்ந்து 34 மணி நேரத்துக்கும் மேலாக இடைவிடாமல் கொட்டித்தீர்த்த மழையால், திருவண்ணாமலை நகரம் மழை வெள்ளத்தில் சிக்கித்தவித்தது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தன. தாழ்வான பகுதிகளில் குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்தன. வீடுகள் மற்றும் கடைகளுக்குள் மழைநீர் புகுந்தன. அதனால், மக்கள் கடும் அவதிபட்டனர்.
இந்நிலையில், திருவண்ணாமலை வஉசி நகர் பகுதியில், தீபம் ஏற்றும் மலையில், கடந்த 1ம் தேதி மாலை திடீரென மழை வெள்ளத்தால் மண்சரிவு ஏற்பட்டது. மேலும், பாறைகளும் உருண்டன. அதனால், மண் சரிவில் கூலித்தொழிலாளி ராஜ்குமார் என்பவரது வீடு சிக்கியது. கண் இமைக்கும் நேரத்தில் வீடு முழுவதும் மண் மேடானது. வீட்டுக்குள் இருந்த ராஜ்குமார் உள்ளிட்ட 7 பேர் மண்ணுக்குள் புதைந்து உயிரிழந்தனர். மேலும், பலரது வீடுகள் இடிந்து சேதமடைந்தன. எனவே, அங்கிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
மேலும், மலையில் ஏற்பட்டுள்ள மண் சரிவு பகுதிகளை வல்லுநர் குழு ஆய்வு செய்தது. மலையில் ஈரப்பதம் இருப்பதால், எந்த நேரத்திலும் பாறைகள் சரியலாம் என எச்சரித்தனர். அதன் அடிப்படையில், மகா தீபத்தை தரிசிக்க மலையேற பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தீபம் ஏற்றும் பணியில் ஈடுபடுவோர் மட்டுமே பாதுகாப்பாக மலையேற அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், திருவண்ணாமலையில் நேற்று அதிகாலை முதல் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. விட்டுவிட்டு பெய்யும் தொடர் மழையால், திருவண்ணாமலை தீபமலையில் மீண்டும் மண் சரிவு ஏற்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
அதன்படி, தீபமலையின் கிழக்கு திசையில் நேற்று ஒரு இடத்தில் மண் சரிந்தது. மேலும், மகா தீபத்திருவிழாவை தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் திரண்டுள்ளனர். எனவே, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை பணிகளை மாவட்ட நிர்வாகம் அதிகரித்திருக்கிறது. அதன்படி, தேசிய பேரிடர் மீட்புக்குழுவை மீண்டும் அனுப்பி வைக்குமாறு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கோரிக்கை வைத்தார். அதன் அடிப்படையில், அரக்கோணத்தில் இருந்து 33 பேர் கொண்ட தேசிய பேரிடம் மீட்புக்குழுவினர் திருவண்ணாமலைக்கு நேற்று இரவு வந்தனர். தீபத்திருவிழா மற்றும் பவுர்ணமி கிரிவலம் நிறைவடையும் வரை (15ம் தேதி) திருவண்ணாமலையில் முகாமிட திட்டமிட்டுள்ளனர். தீபமலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் இடத்தில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் பாதுாப்பு பணிக்காக செல்ல உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். மேலும், தேசிய பேரிடம் மீட்புக்குழுவினருடன், மாநில பேரிடர் மீட்புக்குழுவினரும் பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.
The post தீபமலையில் மண்சரிவு ஆபத்து 33 பேர் கொண்ட பேரிடர் மீட்புக்குழுவினர் வருகை பாதுகாப்பு முன்னெச்சரிக்கை பணியில் ஈடுபட திட்டம் திருவண்ணாமலையில் மீண்டும் கனமழை appeared first on Dinakaran.